நாடுதழுவிய வேலைநிறுத்தம் குறித்து NUBE ரகசிய வாக்கெடுப்பு

தேசிய வங்கி ஊழியர் சங்கம் (Nube), நாடு தழுவிய வேலைநிறுத்தம் செய்வது பற்றி முடிவெடுக்க ரகசிய வாக்கெடுப்பு ஒன்றை நடத்தவுள்ளது.

50,000 வங்கி ஊழியர்கள், தங்கள் உரிமைகளுக்காகவும் நீண்டகால நலன்களுக்காகவும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் அரசாங்கத் தலையீட்டை எதிர்த்தும் போராட தயாராகிவிட்டனர் என்று அதன் தலைமைச் செயலாளர் ஜே.சாலமன் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கூடிய பேராளர்கள், வேலைநிறுத்தம் செய்த முடிவு செய்ததாக அவர் சொன்னார். 

“இதன் தொடர்பில் மேலே நடக்க வேண்டியது பற்றி என்யுபிஇ உறுப்பினர்களின் கருத்தையறிய செயலவை இரகசிய வாக்கெடுப்புக்கு ஏற்பாடு செய்யும்.” 

கடந்த வெள்ளிக்கிழமை மாலை மணி 5க்கு ஜாலான் புடுவில் அரசுதொடர்புடைய மேபேங்க் பெர்ஹாட் அமைந்துள்ள மினாரா மேபேங்குக்கு வெளியில், என்யுபிஇ மறியல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

சிறிது நேரம் மழை பெய்தாலும், சங்க உறுப்பினர்கள் உற்சாகத்துடன் அதில் கலந்துகொண்டு மேபேங்கின் வரம்புமீறிய நடவடிக்கைகளையும் ஊழியர்களின் உரிமைகள் மீறப்படுவதையும் விவரிக்கும் பாடல்களைப் பாடினார்கள்; சுலோகங்களை முழக்கினர்.

வருமானத்தில் நிலவும் பெரிய இடைவெளியையும் போனஸ் வழங்கப்படாததையும் அவர்கள் கவனப்படுத்தினார்கள். 

அவ்வழியே சென்ற வாகனமோட்டிகள் அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவுதெரிவித்து ஹாரன் ஒலிகளை எழுப்பினார்கள்.

போலீசார் மறியலைக் கலைக்க முனையவில்லை.மேபேங்க் பாதுகாவலர்கள் ஒதுங்கியே இருந்தனர்.

மேபேங்க் தங்களின் நியாயமான குறைபாடுகளைப் புறக்கணித்து வருவதால் அதற்கெதிரான தொழிலியல் நடவடிக்கை தொடரும் என்று சாலமன் கூறினார்.

கடந்த ஆண்டு ஜினிவாவில் ஐநா பன்னாட்டுத் தொழிலாளர் நிறுவனக் கூட்டமொன்றில் ‘மேபேங்க் ஏழைத் தொழிலாளர்களைக் கொள்ளையடிக்கிறது’ என்று கூறும் பதாகைகளை ஏந்திநின்றதற்காக சங்க அதிகாரிகள் இருவரை-உதவித் தலைவர் அப்துல் ஜமில் ஜலாலுடின், பொருளாளர் சென் கா பாட் ஆகியோரை-மேபேங்க் பணிநீக்கம் செய்ததை அவர் நினைவுபடுத்தினார். 

மேபேங்க் நிர்வாகம் உள்ளுக்குள்ளேயே ஒரு தொழிற்சங்கத்தை அமைத்ததை எண்ணியும் என்யுபிஇ கவலையுறுகிறது.

என்யுபிஇ உறுப்பினர்களாகவுள்ள உள்ள வங்கி ஊழியர்கள் 5,000பேரும் அதிலிருந்து விலகி புதிய சங்கத்தில் சேருமாறு நெருக்குதல் கொடுக்கப்படுகிறது என்றும் சாலமன் கூறினார்.

“இது, என்யுபிஇ-யைப் பலவீனப்படுத்தும் ஒரு முயற்சி”, என்று கூறிய அவர் தங்களைப் பிரித்து வைக்க முயற்சிக்கு எதிராக மற்ற வங்கிகளின் ஊழியர்கள் உறுதியான ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்கள் என்றும் சொன்னார்.

வேலைநிறுத்தத்தை அதிகாரிகள், கடந்த காலத்தில் செய்ததைப்போல் தடுத்து நிறுத்தப் பார்ப்பார்கள் என்பதையும் தாங்கள் அறிந்தே இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

என்யுபிஇ அதிகாரிகள் இருவரை மேபேங் பதவிநீக்கம் செய்த விவகாரத்தை மனிதவள அமைச்சர் தொழிலியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார்.நீதிமன்ற விசாரணையில் உள்ள ஒரு விவகாரத்தைக் காரணம் காட்டி வேலைநிறுத்தம் செய்ய இயலாது.

“ஆக, அதை வைத்து வேலைநிறுத்தம் செய்ய இயலாது. ஆனால்,தொழிலாளர் சம்பந்தப்பட்ட மற்ற விவகாரங்கள் உள்ளன. இந்தோனேசியாவில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் வழக்கு தீர்க்கப்படும்வரை அவர்களுக்குச் சம்பளம் கொடுக்கப்படுகிறது. அதை மலேசியாவும் பின்பற்ற வேண்டும்”, என்று சாலமன் கூறினார்.