வாக்காளர்கள் இடமாற்றம் செய்யப்படுவதற்கு சட்டத்துக்குப் புறம்பாக அங்கீகாரம் அளிக்கும் தேர்தல் ஆணைய அதிகாரிகளைத் தண்டிக்க வேண்டும் என்று பெர்சே 2.0 கேட்டுக்கொண்டிருக்கிறது.
தேர்தல் சீரமைப்புக்காக போராடும் அந்த அமைப்பு இன்று நாடாளுமன்றத் தேர்வுக்குழு (பிஎஸ்சி)விடம் ஒப்படைத்த மகஜர் ஒன்றில் இக்கோரிக்கை இடம்பெற்றுள்ளது.
அம்மகஜரை பெர்சே 2.0-உம் தேர்தல் பற்றிய கல்வி,கண்காணிப்பு அமைப்பான திண்டாக் மலேசியாவும் சேர்ந்து தயாரித்துள்ளன.
1954 தேர்தல் குற்றச் சட்டம், 1957 தேர்தல் ஆணையச் சட்டம் ஆகியவற்றில் ஐந்து திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என அதில் முன்மொழியப்பட்டுள்ளது.
பெர்சே 2.0 இணைத் தலைவர் ஏ.சமட் சைட்டிடமிருந்து அம்மகஜரை நேரடியாகப் பெற்றுக்கொண்ட பிஎஸ்சி தலைவர் மெக்சிமஸ் ஜேம்ஸ் ஒங்கில்,“உங்கள் உள்ளீட்டுக்கு நன்றி. நாம் எல்லாருமே சீரமைப்பை விரும்புகிறோம்”, என்றார்.
“எங்கள் வழக்குரைஞர்கள் சட்டங்களை நன்கு ஆராய்ந்து இதைத் தயாரித்திருக்கிறார்கள்.பொதுத் தேர்தலுக்குமுன் இத்திருத்தங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்”, என்று சமட் கூறினார்.
தேர்தல் முடிவுகளைக் கருத்தில்கொண்டு வாக்காளர்கள் தொகுதிமாற்றம் செய்யப்படுவதாக மாற்றரசுக் கட்சிகள் தொடர்ந்து குறைகூறி வந்துள்ளன.