போட்டியிட வேண்டாம் என குவா மூசாங் அம்னோ தலைவர்கள் தெங்கு ரசாலியிடம் சொல்கின்றனர்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது குவா மூசாங் தொகுதியைத் தக்க வைத்துக் கொள்வதற்கு அதன் நீண்ட கால எம்பி-யான தெங்கு ரசாலி மீண்டும் போட்டியிடக் கூடாது என அந்த நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 16 அம்னோ அடிநிலைத் தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அம்னோ பண்டார் லாமா கிளைத் தலைவர் அப்துல் வஹாப் யூனுஸ் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக பெரித்தா ஹரியானும் சினார் ஹரியானும் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

அந்தக் கூட்டத்தில் மூன்று அம்னோ தொகுதித் தலைவர்களும் ஆறு கிளைத் தலைவர்களும் கெசெடார், பெல்டா ஆகியவற்றின் பேராளர்களும் கலந்து கொண்டதாக அந்த ஏடுகள் தெரிவித்தன.

தெங்கு ரசாலிக்கு கூட்டரசு, தொகுதி நிலைகளில் இப்போது செல்வாக்கு இல்லை என்றும் அம்னோவிலும் பிஎன் -னிலும் அந்த முன்னாள் நிதி அமைச்சர் தமது நிலையை இழந்து விட்டதாகவும் தோன்றுகிறது என அப்துல் வஹாப் கூறிக் கொண்டார்.

“அடி நிலைத் தலைவர்கள் என்ற முறையில் நாங்கள் தெங்கு ரசாலில் விடுக்கும் அறிக்கைகள் மீது வெட்கப்பட்டுள்ளோம். வருத்தமடைந்துள்ளோம். காரணம் அவை குறிப்பாக கிளந்தான் எண்ணெய் உரிமப் பண விவகாரம், புர்சா மலேசியா பங்குச் சந்தையில் பெல்டாவை இடம் பெறச் செய்வது ஆகியவற்றில் எதிர்க்கட்சிகளை ஆதரிக்கும் வகையில் அமைந்துள்ளன.”

அரசாங்கத்தில் அல்லது அம்னோவில் பதவிகளைப் பெறுவதற்காக தெங்கு ரசாலி தமது தனிப்பட்ட போராட்டத்தை நடத்தி வருவதாக வருணித்த தொகுதித் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட், மக்கள் பிரச்னைகளை குறிப்பாக குவா மூசாங்கில் வாழ்கின்றவர்கள், கெசெடார் குடியேற்றக்காரர்கள் பற்றி கவலைப்படவில்லை என்றார்.

“தெங்கு ரசாலி நாம் இனிமேலும் நம்பக் கூடிய தலைவர் அல்ல என்பதை அது காட்டுகிறது. கௌரவமாக விலகிக் கொண்டு இளைய தலைவர் ஒருவர் போட்டியிடுவதற்கு வழி விடுமாறு நான் அவரைக் கேட்டுக் கொள்கிறேன்,” என அப்துல் அஜிஸ் சொன்னார்.

கடந்த 37 ஆண்டுகளாக குவா மூசாங் தொகுதியை தங்கள் எம்பி வழி நடத்தி வருவதாக அப்துல் வஹாப் சொன்னார்.

அடுத்த தேர்தலில் அம்னோ வெற்றி பெற வேண்டுமானால் கட்சியின் போராட்டத்தில் உருமாற்றம் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குவா மூசாங் தொகுதியை தக்க வைத்துக் கொள்வதற்கு அம்னோவும் பிஎன் -னும் தம்மை நியமனம் செய்யா விட்டால் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக தெங்கு ரசாலி கூறியிருப்பதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து அந்த அடி நிலைத் தலைவர்களுடைய அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

குவா மூசாங் தொகுதியில் மீண்டும் நிற்க தெங்கு ரசாலி விரும்பினால் பக்காத்தான் சார்பில் அவர் போட்டியிடுவது மீது அந்த அம்னோ மூத்த உறுப்பினருடன் பேச்சு நடத்த பக்காத்தான் ராக்யாட் தயார் என பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் அயூப் கூறியதாக நேற்று சினார் ஹரியான் செய்தி வெளியிட்டிருந்தது.

தெங்கு ரசாலி இப்போது வெளிநாட்டில் இருப்பதால் அந்த விவகாரம் மீது அவர் கருத்துக் கூற முடியாது என அவருடைய உதவியாளர் ஒருவர் மலேசியாகினியிடம் சொன்னார்.