ரிம600மில்லியன் மெகா திட்டத்துக்கான குத்தகையை அம்னோ-தொடர்புடைய நிறுவனத்துக்கு வழங்க மந்திரி புசார் அசிசான் அப்துல் ரசாக் செய்த முடிவுதான் கெடா பாஸ் கட்சியில் ஒரு நெருக்கடியை உருவாக்கிற்று.
இதை, மாநில ஆட்சிக்குழுவில் மறுநியமனம் செய்யப்பட்டதை முதலில் ஏற்க மறுத்த இரு பாஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான பஹரோல்ரசி முகம்மட் நவாவி உறுதிப்படுத்தினார்.
அத்திட்டத்துக்கு அங்கீகாரம் வழங்குமாறு நெருக்கப்பட்டதால்தான் மறுநியமனத்தை ஏற்க மறுத்தார் என்ற வதந்தி குறித்து மலேசியாகினி நேற்று பஹரோல்ரசியிடம் வினவியது.
“ஏறக்குறைய அப்படித்தான்”, என்றவர் பதிலிறுத்தார்.
கெடா அரசுக்கு அணுக்கமான வட்டாரங்கள், அசிசானுடன் கொண்ட கருத்துவேறுபாடுகளால்தான் பஹரோல்ரசியும் இஸ்மாயில் சாலேயும் மறுநியமனத்தை ஏற்கவில்லை என்று மலேசியாகினியிடம் ஏற்கனவே தெரிவித்திருந்தன.
அதில், ரிம600 சாலைத் திட்டம் கெடா அம்னோ தொகுதித் தலைவருடன் தொடர்புகொண்ட நிறுவனத்துக்கு வழங்கப்படுவதை ஏற்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டதுதான் முக்கிய காரணம் என்பது தெரிய வருகிறது.
அத்திட்டம் பற்றி விவரிக்க பஹரோல்ரசி விரும்பவில்லை.அது, அந்த நிறுவனமும் அரசுசார் நிறுவனம்(ஜிஎல்சி) ஒன்றும் மேற்கொள்ளவிருந்த கூட்டுத் திட்டம் என்று மட்டுமே அவர் குறிப்பிட்டார். “பல மில்லியன் ரிங்கிட் திட்டம்”என்றும் சொன்னார்.
“அதற்கு நான் ஒப்புதல் கொடுக்கவில்லை.மாநில ஆட்சிக்குழுவில் கூட்டு முடிவெடுப்பதுதான் வழக்கம்.ஆனால், அசிசான் அதை மீற முயன்றார்”.
பொது டெண்டருக்கு அழைப்பு விடுக்கவில்லையா என்று வினவியதற்கு ஜிஎல்சி சம்பந்தப்பட்டிருப்பதால் அவ்வாறு செய்வதில்லை என்று கூறிய அவர், குத்தகை ஒப்பந்தம் இன்னும் வழங்கப்படவில்லை என்றார்.
“எப்படியோ அதைத் தடுத்து நிறுத்தி விட்டோம்.இன்னும் ஒப்பந்தம் வழங்கவில்லை என்பதால் இவ்விவகாரத்துக்குத் தீர்வு கண்டுவிடலாம்”.
பஹரோல்ரசி நேற்று அவரது வீட்டில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டமொன்றில் ஆட்சிக்குழுவுக்கு மறுநியமனம் செய்யப்பட்டிருப்பதை ஏற்பதாக அறிவித்த பிறகு இவ்விவரங்களைத் தெரிவித்தார்.
வார இறுதியில்,கெடா நெருக்கடியில் பாஸ் தலைமைத்துவம் தலையிட்டு சமரச அவர் முடிவு செய்தார்.பாஸ் தலைமைத்துவம் கெடா ஆட்சிக்குழுவைக் கண்காணிக்க இயக்கக் குழு ஒன்றையும் அமைத்துள்ளது.
அசிசானுடன்(இடம்) தாம் எப்போதுமே நெருக்கமாக இருந்ததில்லை என்பதை பஹரோல்ரசி ஒப்புக்கொண்டார்.தாமும் இஸ்மாயிலும் பல விசயங்களில் அவருடன் கருத்துவேறுபாடு கொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.அவற்றில் ஒன்றுதான் இச் சாலைத் திட்டம்.
இப்போது இயக்கக் குழு அமைக்கப்பட்டிருப்பது அவருக்கு ஆறுதல் அளிக்கிறது.இனி, அசிசானின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும்.அவரது போக்கும் மாறலாம் என்றார்.
நேற்று மலேசியாகினி அசிசானின் கருத்தை அறிய விரும்பி அவரைத் தொடர்புகொள்ள முனைந்தது.ஆனால், முடியவில்லை.
அசிசானின் உதவியாளர், அவர் உடல்நலமில்லை என்றும் ஓய்வெடுத்துக்கொள்ள விரும்புவதாகவும் கூறினார்.
இன்று பஹரோல்ரசியை மீண்டும் தொடர்புகொண்டபோது, அசிசான் மருத்துவமனையில் இருப்பதாகக் கூறினார்.
அத்துடன் ஆட்சிகுழுவில் மறுபடியும் நியமனம் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தும் ஆவணம் எதுவும் தமக்கோ இஸ்மாயில்லோ இன்னும் வந்துசேரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.