கடந்த மாதம் மூன்று நீதிபதிகளைக் கொண்ட குழு மீது தமது காலணிகளை எறிந்த 46 வயது இமாமுக்கு நாளை கூட்டரசு நீதிமன்றத்தில் ஆஜராகி தமது செயலுக்குக் காரணம் காட்டுமாறு கோரும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
புத்ராஜெயாவிலிருந்து இரண்டு ரோந்துக் கார்களில் ஜாலான் கொக்ரெனில் உள்ள தமது இல்லத்துக்கு இன்று வந்த போலீசார் தம்மிடம் அதற்கான நோட்டீசை வழங்கியதாக ஹொஸ்லான் ஹுசேன் என்ற அந்த இமாம் மலேசியாகினியிடம் கூறினார்.
“காலணிகளை எறிந்த என் நடவடிக்கைகளுக்கு பதில் கூறுவதற்காக நாளை காலை 9 மணிக்கு நான் கூட்டரசு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அதனிடமிருந்து வந்த அந்தக் கடிதம் கூறியது,” என்றார் அவர்.
மலாயா தலைமை நீதிபதி சுல்கெப்லி அகமட் மாக்கினுடின் தலைமையில் கூடிய மூன்று நீதிபதிகள் குழுவை நோக்கி ஹொஸ்லான் கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி தமது காலணிகளை எறிந்தார். அந்த நீதிபதிகள் குழுவில் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி சுரியாடி ஹலிம் ஒமார், முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஸாலேஹா ஸாஹாரி ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.
குடியிருப்பு வீட்டிலிருந்து வெளியேறுமாறு ஹொஸ்லானுக்கு கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய விவகார மன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்து கொள்வதற்கு அவருக்கு அனுமதி அளிக்க கூட்டரசு நீதிமன்றம் மறுத்ததைத் தொடர்ந்து அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
2008ம் ஆண்டு தொடக்கம் அந்த இமாம் அந்த வீட்டில் இருந்து வந்தார்.
அந்த வீட்டிலிருந்து அவர் வெளியேற்றப்பட வேண்டும் என உத்தரவை கடந்த ஜுன் மாதம் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் வெளியிட்டது.
அந்த முறையீட்டை ஹொஸ்லான் சமர்பித்துள்ளார். அது தொடர்பான விசாரணையின் போது அவர் நீதிபதிகள் மீது தமது காலணிகளை எறிந்தார்.
அவர் இப்போது அந்த குடியிருப்பு வீட்டிலிருந்து வெளியேறி விட்டார்.
பிப்ரவரி 22ம் தேதி நீதிமன்ற விசாரணையின் போது ஹொஸ்லான் தமது சார்பாக வாதாடுவதற்கு ஹொஸ்லான் எந்த வழக்குரையும் நியமிக்கவில்லை. ஆனால் நாளை தம்மை ஒரு வழக்குரைஞர் பிரதிநிதிப்பார் என அவர் தெரிவித்தார்.