என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் தொடர்பான பல விஷயங்களை அம்பலப்படுத்தி வரும் பிகேஆர், அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் பங்சாரில் எட்டு வர்த்தக சொத்துக்களைக் கொள்முதல் செய்வதற்கு உதவியாக அரசாங்கம் வழங்கிய எளிய கடனைப் பயன்படுத்தியுள்ளதாக இன்று கூறியது.
அதற்கு ஆதாரமாக வங்கி ஆவணங்களை காட்டினார் (அவற்றில் ஒரு பகுதி நிருபர்களுக்குக் கொடுக்கப்பட்டது). மொத்தம் 9.69 மில்லியன் ரிங்கிட் அடமான மதிப்புள்ள எட்டு KL Eco City கடை மனைகளைக் கொள்முதல் செய்வதற்கு என்எப்சி நிதிகள் மீது தமக்கு உள்ள கட்டுப்பாட்டை அந்த நிறுவனத்தின் தலைவர் முகமட் சாலே பயன்படுத்தியதாக பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் கூறினார்.
முகமட் சாலேயும் இன்னும் அடையாளம் தெரிவிக்கப்படாத தனி நபர்களும் கூட்டாக எடுத்துள்ள கடன்களைப் பயன்படுத்தி எட்டு கடை மனைகளும் வாங்கப்பட்டதாக ராபிஸி சொன்னார்.
“அடமான மதிப்பு என்பது சந்தை விலையை விடக் குறைவாகும். அந்தச் சந்தை மதிப்பு ஒரு சதுர அடிக்கு ஆயிரம் ரிங்கிட் முதல் 1100 ரிங்கிட் வரையாகும். அதன் அடிப்படையில் அந்தச் சொத்துக்களின் மதிப்பு 12 மில்லியன் ரிங்கிட் என நாங்கள் மதிப்பிட்டுள்ளோம்,” என்றார் அவர்.