தாஜுடினுக்கு எதிரான எம்ஏஎஸ் வழக்கை விசாரிப்பதை நீதிமன்றம் தள்ளி வைத்தது

எம்ஏஎஸ் என்ற மலேசிய விமான நிறுவனம் தனது முன்னாள் தலைவர் தாஜுடின் ராம்லிக்கு எதிராகத் தொடுத்த வழக்கை விசாரிப்பதை தள்ளி வைக்க கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.

விசாரணை நீதிபதி ரோஸிலா யோப் முன்னிலையில் அந்த விவகாரம் இன்று எழுப்பப்பட்டது.

அந்த வழக்கு தொடர்பாக சமர்பிக்கப்பட்ட பல முறையீடுகள் இன்னும் நிலுவையில் இருப்பதாக தாஜுடின் வழக்குரைஞர் மலாயாத் தலைமை நீதிபது சுல்கெப்லி அகமட் மாக்கினுடினுக்குக் கடிதம் எழுதியதாகத் தெரிய வருகிறது.

எல்லாத் தரப்புக்களுக்கும் ஆட்சேபம் இல்லை என்றால் அந்த வழக்கைத் தள்ளி வைக்கலாம் என்று நீதிபதி சுல்கெப்லி அதற்குப் பதில் எழுதியுள்ளதாக நம்பப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து அந்த விவகாரம் நீதிபதி ரோஸிலா முன்னிலையில் எழுப்பப்பட்டது. அவர் சம்பந்தப்பட்ட தரப்புக்களின் இணக்கத்துடன் வழக்கை தள்ளி வைப்பதற்கு அனுமதி அளித்தார்.

கடந்த திங்கட்கிழமையன்று தாஜுடின் சமர்பித்த எதிர்-கோரிக்கையை தள்ளுபடி செய்யுமாறு அரசாங்கம் தாக்கல் செய்த விண்ணப்பத்தை நிராகரித்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் அந்த வழக்கை தள்ளுபடி செய்ய தாஜுடின் சமர்பித்த விண்ணப்பத்தையும் அவர் நிராகரித்தார்.

அந்த வழக்கில் எம்ஏஎஸ்-ஸுடன் MAS Golden Holidays Sdn Bhd, MAS Hotels & Boutiques Sdn Bhd வாதிகள் ஆகும்.

தாஜுடின், அவரது முன்னாள் நிறுவனமான Naluri Corporation Bhd, Promet (Langkawi) Resorts Sdn Bhd, Kauthar Venture Capital Sdn Bhd, Pakatan Permai Sdn Bhd ஆகியவை பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

தாஜுடின் தமது சொந்த நன்மைகளுக்காக எம்ஏஎஸ்-ஸைப் பல குத்தகைகளை எடுக்கச் செய்ததின் மூலம் தமது கடமைகளையும் பொறுப்புக்களையும் வேண்டுமென்றே மீறியதுடன் நம்பிக்கை மோசடியும் செய்துள்ளதாக எம்ஏஎஸ் அந்த வழக்கில் குறிப்பிட்டுள்ளது.

எம்ஏஎஸ் தலைவர், இயக்குநர் என்னும் முறையில் அந்தத் தேசிய விமான நிறுவனம் வழங்கிய ஆலோசனைகளை தாஜுடின் புறக்கணித்தார் என்றும் ஒரு நிர்வாகி என்ற முறையில் நியாயமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதால் எம்ஏஎஸ்-ஸுக்கு இழப்பு ஏற்பட்டது என்றும் அது கூறிக் கொண்டது.

தாஜுடின் பிரதி வாதத்தைச் சமர்பித்ததுடன் எதிர் கோரிக்கையையும் தாக்கல் செய்தார்

அதற்கு பதிலடியாக தாஜுடின் தமது எதிர்வாதத்தை தாக்கல் செய்ததுடன் எம்ஏஎஸ், அதன் நிர்வாகிகள், அரசாங்கம் ஆகிய தரப்புக்களுக்கு எதிராக எதிர்-கோரிக்கையையும் சமர்பித்தார்.

தாம் நம்பிக்கை மோசடி செய்ததாக அல்லது தமது பொறுப்புக்கள் சம்பந்தப்பட்ட வரையில் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுவதை தாஜுடின் அந்தக் கோரிக்கையில் மறுத்துள்ளார்.

மாஸ் தொடுத்துள்ள வழக்கு உண்மையான புள்ளி விவரங்கள் அல்லது சூழ்நிலைகள் இல்லாத வெறுமையான குற்றச்சாட்டுக்கள் என்றும் தாஜுடின் கூறிக் கொண்டார்.