ஜனவரி மாதம் மலேசியாவின் ஏற்றுமதி வளர்ச்சி மந்தமடைந்தது

இவ்வாண்டு ஜனவரி மாத ஏற்றுமதிகள் ஆண்டு அடிப்படையில் நலிவாக இருந்தன. சீனா, ஐரோப்பா உட்பட பல பெரிய சந்தைகளிடமிருந்து தேவை பெரிதும் குறைந்ததே அதற்குக் காரணம் என அரசாங்கம் இன்று கூறியது.

ஜனவரி மாத மொத்த ஏற்றுமதி மதிப்பு 55.07 பில்லியன் ரிங்கிட் என அனைத்துலக வர்த்தக தொழிலியல் அமைச்சு கூறியது.

பெட்ரோலியம், இரும்பு, எஃகு ஆகியவை முக்கிய ஏற்றமதிப் பொருட்களாகும்.
 
அரசாங்கம் இவ்வாண்டுக்கு ஆரூடம் கூறியுள்ள 4 முதல் 5 விழுக்காடு வாளர்ச்சியைப் பெற வேண்டுமானால் உள்நாட்டுத் தேவையை அதிகரிக்க வேண்டும் என RAM Holdings என்ற ஆய்வு நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் இயா கிம் லெங் கூறினார்.

“ஐரோப்பிய மந்த நிலை நமது ஏற்றுமதிகள் குறைந்துள்ளதற்குக் காரணம்,” என அவர் சொன்னார்.

“நமது பொருளாதாரத்துக்கு பாரம்பரியமாக ஆதரவாக இருந்து வந்த சீனாவுக்கான நமது ஏற்றுமதிகள் குறைந்துள்ளது மிகவும் கவலை அளிக்கிறது.”

பல வட்டார நாடுகள் தங்கள் சொந்த வளர்ச்சிக்குப் பெரிதும் நம்பியுள்ளன சீனாவின் பெரிய பொருளாதாரமும் மந்தமடைந்துள்ளது. காரணம் ஐரோப்பாவில் தொடரும் கடன் நெருக்கடியாலும் அமெரிக்கப் பொருளாதார மீட்சி சீராக இல்லாததாலும் சீனாவின் ஏற்றுமதிகள் கூட வீழ்ச்சி கண்டுள்ளன.

“இவ்வாண்டு முற்பகுதியில் மலேசிய ஏற்றுமதிகள் மிக நலிவாக இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” இயா மேலும் கூறினார்.

சீனாவுக்கான மலேசிய ஏற்றுமதிகள் 12.2 விழுக்காடும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஏற்றுமதிகள் 14.5 விழுக்காடும் சரிந்துள்ளன.

கடந்த ஜனவரி மாதம் ஜப்பான், சிங்கப்பூர், சீனா, அமெரிக்கா ஆகியவை மலேசியாவின் முக்கிய ஏற்றுமதிச் சந்தைகளாக திகழ்ந்தன.

-ஏஎப்பி