கெராக்கான் தலைவர் கோ சூ கூன் 18 ஆண்டுகள் முதலமைச்சர் பதவியை விடாமல் பிடித்துக்கொண்டிருந்ததுபோல் தாம் இருக்கப்போவதில்லை எனப் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் கூறியுள்ளார்.
சீன நாளேடான சைனா பிரசுக்கு சிறப்பு நேர்காணல் வழங்கிய லிம், மாநில முதலமைச்சர் ஆனதை அடுத்து அரசியல் வாழ்க்கையின் உச்சக்கட்டத்தை அடைந்து விட்டதாககவும் ஆனால், கோ செய்ததுபோல் நீண்டகாலத்துக்கு அதில் ஒட்டிக்கொண்டிருக்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.
மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களை மீறி செயல்படும் ஒரு சர்வாதிகாரத் தலைவர் என்று கூறப்படுவதை மறுத்த லிம், அம்னோ அப்படி ஒரு கருத்தை உருவாக்கி வைத்திருப்பதாகக் கூறினார்.
மாநில ஆட்சிக்குழு ஒரு குழுவாக செயல்படுவதைக் காண்பிக்க லிம் தம் நிர்வாகப் பொறுப்புகளில் மேலும் பலவற்றை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறப்படுவதைப் பற்றிக் கருத்துரைத்த அவர் ஊடகங்கள் அப்படி ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளன என்றார்.
“ஒரு முதலமைச்சர் பலவற்றையும் பார்க்க வேண்டியிருக்கும், பல இடங்களுக்குப் போக வேண்டியிருக்கும்.விவசாயமோ விளையாட்டுப் போட்டியோ பல நிகழ்வுகளிலும் கலந்துகொள்ள வேண்டியிருக்கும். என் வேலை அப்படி.
“இதனால் மற்ற கட்சிகள் மற்ற ஆட்சிக்குழு உறுப்பினர்களை விடுத்து என்னைத் தாக்குகின்றன.நான் என்னைப் பாதுகாத்துக்கொள்ள முயல்கிறேன்.இது ஒரு தோற்றத்தை உருவாக்கி விடுகிறது”, என்றாரவர்.
ஹுஸ்னிக்கு எம்பி பதவிமீது கண் என்று கூறப்படுவதற்கு ஜம்ரி மறுப்பு
இன்னொரு செய்தித்தாளின் நேர்காணலில், பேராக் மந்திரி புசார் ஜம்ரி அப்துல் காடிர், இரண்டாம் நிதி அமைச்சர் ஹுஸ்னி முகம்மட் ஹனட்ஸ்லா பேராக்கின் அடுத்த மந்திரி புசாராவார் என்ற வதந்தியைத் தள்ளுபடி செய்தார்.
“மாற்றரசுக் கட்சிக்கு பேசுவதற்கு வேறு விவகாரம் கிடைக்கவில்லை.இப்படி ஒரு புரளியைக் கிளப்பிவிட்டிருகிறார்கள்.நாங்கள் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை”, என்று சீன நாளிதழான ஓரியெண்டல் டெய்லி நியுசுக்கு வழங்கிய நேர்காணலில் ஜம்ரி கூறினார்.
அடுத்த தவணையிலும் மந்திரி புசாராக தொடரும் நம்பிக்கை உண்டா என்ற வினாவுக்கு அவர் பதிலளிக்க மறுத்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்தான் அதை முடிவு செய்ய வேண்டும் என்றார்.
ஆட்சிக்குழு உறுப்பினர்களில் ஒருவரான ஹமிடா ஒஸ்மானுடன் இணைந்து பணியாற்றுவது அவருக்குப் பிரச்னையாக உள்ளதெனக் கூறப்படுவதையும் பங்கோர் சட்டமன்ற உறுப்பினரான ஜம்ரி மறுத்தார்.
மக்களைக் குழப்ப மாற்றரசுக் கட்சி அப்படியொரு வதந்தியை உலவ விட்டிருக்கிறது என்றவர் வலியுறுத்தினார்.