மன்னிப்பு வேண்டாம், மாற்றம்தான் வேண்டும்!, இராமகிருஷ்ணன்

நான்கு ஆண்டுகளுக்குப் பின், 2008 ஆம் ஆண்டுகால தவறுகளுக்காக பிரதமர் நஜிப் ரசாக் மன்னிப்பு கேட்டுவிட்டார். மக்களின் அன்றைய புறக்கணிப்பை தாம் திறந்த மனதோடு ஏற்றுக்கொள்வதாகவும், குறைகளை நிவர்த்தி செய்வதாகவும் மலாய் மைய மாநிலமான கெடாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பிரதமர் கூறியுள்ளத்தை செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.

ஆனால், கெடா அம்னோ தகவல் பிரிவுத் தலைவரால் பிரதமரின் இந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தேசிய முன்னணியின் தோல்விக்கு அதன் தவறுகளே காரணம் என்ற கூற்று சமுதாயத்தின் கணிப்பே தவிர வேறொன்றுமில்லை என்கிறார் அவர்.

பிரதமர் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுள்ளதை சில “குறுநில மன்னர்களாலும்” (நெப்போலியன்ஸ்) ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருந்தால்தான் தவறுகளை நிவர்த்தி செய்ய இயலும் என அம்னோவின் தேசிய தகவல் பிரிவு தலைவர் கருத்துரைத்துள்ளார்.
 

 மன்னிபு ஒரு பொது உறவு விசயமாகி விட்டது

அதே வேளை, துணைப் பிரதமர் இந்த மன்னிப்பு விவகாரத்தை ஒரு சிறிய விசயமாகக் கருதுகிறார் என்கிறார் இராமகிருஷ்ணன்.

அவரைப் பொறுத்தவரையில், “சமூக பொருளாதாரம், கலாச்சாரம், கல்வி, உலக நாடுகளுடனான நல்லுறவு போன்றவற்றில் மலேசியா பீடுநடை போடுகிறதே என்று துணைப் பிரதமர் கூறியிருப்பது அம்னோவுக்கு ஆகமொத்தத்தில் மன்னிப்பின் அர்த்தம் புரியவில்லை என்பதைக் காட்டுகிறது என்று இராமகிருஷ்ணன் மேலும் கூறினார்.

“அம்னோ அரசியவாதிகளிடையே இது பொது உறவு விசயமாகிவிட்டது. இதனால், பிரதமரின் அந்த மன்னிப்பு போலியான ஒரு வருத்தம் போல் ஆகிவிட்டது.
 

அம்னோவை பிரதமரால் மீட்க முடியுமா?

“2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர், குறிப்பாக நஜிப் ரசாக் நியமனம் பெற்ற பின்னர், அம்னோவின் வார்த்தைகளும், செயற்தன்மைகளும் மேம்பாட்டிற்கான மாற்றத்தைப் பிரதிபலிக்கவில்லை. மாற்றத்துக்கான தமது முயற்சிகளில் பிரதமர் தனித்துவிடப்பட்டுள்ளது போல் தோன்றுகிறது. இனவாதம், சொந்தபந்தங்களுக்குத் தனிச்சலுகை, ஊழல் போன்றவற்றிலிருந்து அம்னோவை மீட்க பிரதமரால் முடியுமா?”, என்று இராமகிருஷ்ணன் வினவுகிறார்.
 

மாற்றம் அனைத்து தலைவர்களிடமிருந்து வர வேண்டும்

2008 ஆம் ஆண்டு தேர்தலில் அம்னோ சரிவு கண்டதற்கு காரணம், மக்கள் கூட்டணி கட்சிக்கு பொதுமக்கள் கண்மூடித்தனமாக அளித்த ஆதரவுதான் என்று அம்னோ கூறுகிறது. அதே வேளை, தொடர்ந்து அதிகாரத்தில் இருக்க அம்னோ கங்கணம் கட்டியுள்ளது. எது எவ்வாறாக இருப்பினும், மாற்றம் என்பது அனைத்து தலைவர்களிடமிருந்தும் கூட்டாக வர வேண்டிய ஒன்று. உச்சத்திலுள்ள தலைவர் மட்டும் உண்மைவாதியாக இருந்தால் போதாது என்றார் இராமகிருஷ்ணன்.

பெரும் நம்பிக்கையுடன் செயலாக்கப்படும் பிரதமரின் மறுமலர்ச்சித் திட்டங்கள் எதிர்பார்த்த விளைவைக் கொடுக்கவில்லை. மேலும், அரசாங்கச் சேவைகள் இன்னமும் மனநிறைவை அளிப்பதாக இல்லை. பெமாண்டுவினால் (Pemandu) அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு மறுமாற்றத் திட்டங்களில் அம்னோ ஆதரவு “தலையாட்டி” அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை என்பதை செனட்டர் இராமா சுட்டிக்காட்டினார்.

கோடிக்கணக்கான பணம் செலவிடப்படுகிறது. ஆனால், சாதனைகள் என்று கூறிக்கொள்வதற்கு என்ன விசயங்கள் இருக்கின்றன என்று அவர் வினவினார்.

என்எப்சி ஊழல் விவகாரத்தில் போலீஸ், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், சட்டத்துறை அலுவலகம் ஆகியவை இன்னமும் மௌனம் சாதித்து வருகின்றன. ஊழல் விவகாரம் வெளியான பிறகும் அம்னோ மகளிர் பிரிவு தலைவர் இன்னமும் ஆற்றலுடன் நடமாடிக்கொண்டிருக்கிறார். அரசாங்கக் குத்தகைகள் அளிக்கப்படுவதில் இன்னும் வெளிப்படையான போக்கு கடைபிடிக்கப்படவில்லை. மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் பிழிஞ்சி எடுக்கப்படுவதாக அவர் கூறினார்.
 

மன்னிப்பு கேட்டு என்ன பயன்?

“வெளிப்படையான நிருவாக முறை, சரியான கணக்குப்பதிவின்றி அரசாங்கத்தின் தனியார்மய திட்டங்கள் சைட் மொக்தார் அல்புக்கரி போன்ற அம்னோ “குடும்பச் சலுகை”க்காரர்களுக்கு வழங்கப்படுகின்றன.

“2008 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது இனங்களுக்கிடையிலான இடைவெளி மேலும் விரிசலாகியுள்ளது. ஆகவே, திட்ட அமலாக்கம், தீவிர பரிசோதனை, அரசாங்க சேவையில் சீர்திருத்தம் ஏதும் இல்லாதபட்சத்தில், மன்னிப்பு கேட்டு என்ன பயன்?” என்று இராமா மேலும் வினவினார்.

கெபெங்கின் லினாஸ் திட்டம், ஒரே பரிவு சுகாதாரத் திட்டம் போன்றவற்றை அகற்றிவிட்டு, சம்பளத் திட்டம், நிபுணர்களின் வெளிநாட்டு குடியேற்றம், உயர்ந்த வாழ்க்கைச் செலவினம் போன்றவற்றுக்கு அறிவார்ந்த தீர்வுகள் ஏற்பட்டால்தான் பிரதமர் மீது மலேசியர்களுக்கு நம்பிக்கை ஏற்படும். அநீதி நிலவும் இடங்களில் நீதி, நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும். இவ்வாறு, சுட்டிக்காட்டப்பட வேண்டிய குறைபாடுகள் நீட்டிக்கொண்டே போகலாம் என்று இராமா மேலும் கூறினார்.
 

மதிமயங்கி விடாதீர்

இந்தக் கண்துடைப்பு மன்னிப்பு கோரிக்கையில் மலேசிய இந்தியர்கள் மதிமயங்கிவிடக் கூடாது என்று எச்சரித்த செனட்டர் இராமகிருஷ்ணன், அம்னோ, இந்தியர்களை ஓரங்கட்டியது போல் எந்த ஓர் அரசாங்கமும் செய்ததில்லை. இந்திய சமூக முன்னேற்றத்திற்கு அம்னோ அனைத்து வகைகளிலும் முட்டுக்கட்டையாக இருந்து வந்துள்ளது. அதனால் பிரதமரின் மன்னிப்பில் பொருளில்லை என்றாரவர்.

அரசாங்க வேலை, வாணிக வாய்ப்புகள் ஆகியவற்றில் இந்தியர்களையும், மலாய்க்காரர்கள் அல்லாத இதர இனத்தவரையும் இணைத்துக்கொள்ளும் கொள்கை மாற்றம் இன்னும் ஏற்படவில்லை.
“இந்நாட்டுக்காக நமது பெற்றோர்கள் கொட்டிய தியாக வேர்வை, இரத்தம், கண்ணீர்த்துளிகள் அனைத்தையும் அம்னோ அரசாங்கம் மதிக்கவில்லை.

“ஆகவே, முன்னே செல்வதற்கு ஒரே தீர்வு? மாற்றம்தான்”, என்பதை செனட்டர் எஸ்.இராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.