போலீஸ்காரர் மோட்டார் சைக்கிளோட்டியை உதைத்தார் என நேரில் பார்த்த நால்வர் சொல்கின்றனர்

ஜோகூர் தங்காக்கில் போலீஸ் சாலைத் தடுப்பு ஒன்றில் கடுமையான  காயங்களுக்கு இலக்கான 14 வயது மோட்டார் சைக்கிளோட்டி லிம் ஹப் ஹுவாங்கை போலீஸ்காரர் ஒருவர் உதைத்ததால் அவர் கீழே விழுந்தார் என நேரில் பார்த்த நால்வர் கூறிக் கொண்டுள்ளனர். ஆனால் போலீஸ்காரர்கள் அதனை மறுத்துள்ளனர்.

கடந்த வார இறுதியில் நிகழ்ந்த அந்தச் சம்பவத்தை பார்த்த நால்வர் சமர்பித்துள்ள போலீஸ் புகார்கள் பற்றித் தெரிவிப்பதற்காக லிம் குடும்பத்தினர், லேடாங் மசீச இளைஞர் தலைவர் டோ கியான் வா-வுடன் சேர்ந்து நிருபர்களைச் சந்தித்ததாக சின் சியூ ஜிட் போ என்ற சீன மொழி நாளேடு கூறியது.  சம்பவத்தை நேரில் பார்த்த அந்த நான்கு சாட்சிகளும் அப்போது அங்கு இருந்தனர்.

லேடாங், தாமான் தங்காக் ஜெயாவில் போடப்பட்டிருந்த போலீஸ் சாலை தடுப்பை, தலைக்கவசம் அணிந்திருக்காத லிம் கடந்த சென்ற போது வேகமாகச் செல்லவில்லை என்பதை அந்தப் போலீஸ் புகார்கள் தெரிவிப்பதாக டோ சொன்னார்.

“மோட்டார் சைக்கிளின் பின்பகுதியை போலீஸ்காரர்  உதைத்ததை அந்த நால்வரும் பார்த்துள்ளனர். அவர் உதைத்ததால் லிம் கீழே விழுந்தார். காயங்களுக்கு இலக்கானார். அந்த நேரத்தில் அந்த இடத்திலிருந்த புறப்படவிருந்த துணை போலீஸ்காரர் ஒருவர் லிம்-மின் சைக்கிள் மீது மோத நேரிட்டது,” என அவர் சொன்னதாக அந்த ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.

லிம்-மின் மோட்டார் சைக்கிளை ஏன் உதைத்தீர்கள் என பெண் போலீஸ்காரர் ஒருவர் அந்த போலீஸ்காரரை கேட்டதை தாம் செவிமடுத்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த பெண் சாட்சி ஒருவர் கூறியதாக டோ தெரிவித்தார்.

அந்தச் சம்பவம் மீதான போலீஸ் விசாரணையைக் கவனித்து வரும் வழக்குரைஞர் குழு ஒன்றிடம் அந்த நான்கு போலீஸ் புகார்களும் சமர்பிக்கப்பட்டுள்ளன.

ரேலா உறுப்பினர் ஓட்டிய மோட்டார் சைக்கிளுடன் மோதியதால் லிம் கீழே விழுந்து காயத்தை ஏற்படுத்திக் கொண்டதாக போலீஸ்காரர்கள் இரண்டு புகார்களை சமர்பித்துள்ளதாக இதற்கு முன்னர் போலீஸ் கூறியது. அந்த ரேலா உறுப்பினருக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன.

விசாரணை நடைபெறுவதால் சம்பந்தப்பட்ட போலீஸ்காரரை இடைநீக்கம் செய்யுமாறு ஜோகூர் போலீஸ் துறையை டோ கேட்டுக் கொண்டார். அந்தப் போலீஸ்காரர் வழக்கம் போல தமது கடமைகளை இன்னும் செய்து கொண்டிருக்கிறார்.

மயக்க நிலையிலிருந்து இப்போதுதான் மீண்டுள்ள லிம்-மிடமிருந்து வழக்குரைஞரோ அவரது குடும்ப உறுப்பினர்களோ இல்லாத சூழ்நிலையில் வாக்குமூலத்தைப் பதிவு செய்த போலீஸ் நடவடிக்கையையும் டோ வன்மையாக கண்டித்தார்.