சமூக நலத் துறை: வருமானம் கூடியதால் பூருஸிஸ் உதவியை இழந்தார்

உடற்குறையுடைய குடியானவர் பூருஸிஸ் லெபியின் வருமானம் கூடியதால் அவருக்கு வழங்கப்பட்ட சமூக நல உதவி நிறுத்தப்பட்டது என சமூக நலத் துறை கூறுகிறது.

சரவாக் விவசாய நவீன மயத் துணை அமைச்சர் மொங் டாஹாங் உத்தரவு காரணமாக அவ்வாறு செய்யப்படவில்லை என அந்தத் துறையின் தலைமை இயக்குநர் ஹாட்சிர் முகமட் ஜைன் தி சன் நாளேட்டிடம் கூறினார்.

பூருஸிஸின் மாத வருமானம் 900 ரிங்கிட்டைத் தாண்டியதால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சமூக நல உதவியைப் பெறுவோர் பட்டியலிலிருந்து அவரது பெயர் நீக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

பூருஸிஸ் தமது வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கடந்த ஆண்டு அவருக்கு அந்தத் துறை 5,000 ரிங்கிட் மானியமும் வழங்கப்பட்டது  என்றார் அவர்.

“பூருஸிஸ் வெற்றிகரமாக தமது வருமானத்தை அதிகரித்துக் கொண்டார். அதனால் உதவி நிறுத்தப்பட்டது. அதுவும் தமது துறை தீவிரமாக விசாரித்த பின்னர் அவருக்கு சமூக உதவி பெறுவதற்குத் தகுதி இல்லை என முடிவு செய்யப்பட்டது,” என அவர் சொன்னதாக தி சன் செய்தி கூறியது.

ஆகவே பூருஸிஸ் எதிர்க்கட்சி ஆதரவாளர் என்பதால் அவருக்கு வழங்கப்பட்ட உதவியை நிறுத்துமாறு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்ரீ அமான் விவசாயத் துறைக்கு மொங் ஆணை பிறப்பித்த கடிதம் பூருஸிஸுக்கு வழங்கப்பட்ட உதவி நிறுத்தப்பட்டதற்கான காரணம் அல்ல,” என்றார் ஹாட்சிர்.

“மொங்-கின் கடிதம் இரண்டு மாதங்கள் பின்னரே வந்தது. அத்துடன் அவரது உத்தரவை தமது துறை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை,” என்றும் அவர் சொன்னார்.

என்றாலும் ஹாட்சிர் அளித்துள்ள விளக்கம் போதுமானதாக இல்லை. காரணம் மொங் கடிதம் எழுதியது விவசாயத் துறைக்கு ஆகும். சமூக நலத் துறைக்கு அல்ல.

900 ரிங்கிட்டுக்கும் மேல் மாத வருமானத்தைக் கொண்ட யாரும் சமூக நல உதவியைப் பெறுவதற்குத் தகுதி இல்லை என ஹாட்சிர் விடுத்துள்ள அறிக்கையும் சமூக நலத் துறை இணையத் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயத்துக்கு முரணாக அமைந்துள்ளது- 1,200 ரிங்கிட்டுக்கும் குறைவான வருமானத்தைக் கொண்ட யாரும் உடற்குறையுடையவருக்கான அலவன்ஸைப் பெறுவதற்குத் தகுதி பெறுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.