கெடாவுக்கு நான்கு மணி நேரம் காரோட்டிச் செல்லும் மாற்றரசுக் கட்சித் தலைவர் என்.சுரேந்திரன் அங்கு பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்துகொள்கிறார். புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.
அங்கிருந்து சீனச் சமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் மாற்றரசுக் கட்சி நிதிதிரட்டும் நிகழ்வு ஒன்றுக்குச் செல்கிறார்.மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் என 2,500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருக்கும் அந்தக் கூட்டத்திலும் அதே செய்தியைத் திரும்பவும் வலியுறுத்துகிறார்.
அந்தக் கூட்டத்திலிருந்து புறப்பட்டு அருகில் உள்ள ஒரு நகரை அவர் சென்றடைந்தபோது மணி கிட்டதட்ட நள்ளிரவாகிவிட்டது. அங்கு ஒரு கால்பந்து திடலில் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் பேசிக்கொண்டிருக்கிறார். மக்கள் மாற்றத்துக்கு வாக்களித்து 1957-இலிருந்து நாட்டை ஆண்டுகொண்டிருக்கும் தேசிய முன்னணியை பதவி இறக்க வேண்டும் என்றவர் வலியுறுத்துகிறார்.
“ஊழலைத் தடுத்து நிறுத்த வேண்டும், ஏமாற்று வேலைகளைத் தடுத்து நிறுத்தவேண்டும், பொய்களைத் தடுக்க வேண்டும்”, என்கிறார் அன்வார்.
இலேசாக மழை தூறிக்கொண்டிருக்கிறது. ஆனால், மக்கள் கூட்டம் அதைப் பொருள்படுத்தவில்லை. தலைக்கு உயரே குடைகளை பிடித்துக்கொண்டு அன்வார் சொல்வதை உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருக்கிறது. அதைக் காணும் சுரேந்திரனுக்கு மனதெல்லாம் பூரிப்பு.
“மாற்றத்தைக் காற்றிலே சுவாசிக்க முடிகிறது. மாற்றம் வேண்டும் என்ற தாகம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் மாற்றத்துக்குத் தயாராகி விட்டார்கள்”,என்று விடிகாலை நேரத்தில் கோலாலம்பூருக்குத் திரும்பும் வழியில் சுரேந்திரன் டிபிஏ-இடம் தெரிவிக்கிறார்.
அன்வார், ஜனவரியில் குதப்புணர்ச்சி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதிலிருந்து அவரும் அவரின் சகாக்களும் ஓய்வுஒழிச்சலின்றி நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக பயணம் செய்து கூட்டங்களில் கலந்துகொள்கிறார்கள், அடுத்த தேர்தலுக்கு நிதி திரட்டும் நிகழ்வுகளை நடத்துகிறார்கள்.
பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டில்தான் நடக்க வேண்டும்.ஆனால், முன்கூட்டியே, இவ்வாண்டு ஜூலையில் அது நடத்தப்படலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.
2008 பொதுத் தேர்தலில் மாற்றரசுக் கட்சி மிகப் பெரிய முன்னேற்றத்தைக் கண்டது.166 நாடாளுமன்ற இடங்களில் 81 இடங்களைக் கைப்பற்றி ஆளும்கட்சியைக் கவிழ்க்கும் நிலைக்கு அது சென்று விட்டது.சாபா, சரவாக்கின் 56 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுதான் ஆளும்கட்சியின் வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தியது.
“2008 வெற்றியை எங்களாலேயே நம்ப முடியவில்லை”, என்று சுரேந்திரன் கூறினார். “மலேசிய அரசியலில் அப்படி எதுவும் அதற்குமுன் நடந்ததில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் பிஎன் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறுவதே வழக்கமாக இருந்தது.”
ஏப்ரலில் சரவாக் மாநிலத் தேர்தல்களில் மாற்றரசுக் கட்சிக்குக் கிடைத்த வலுவான ஆதரவு பெரும் ஊக்கத்தைக் கொடுத்துள்ளது.
‘மெளனமாக உள்ள பெரும்பான்மை மாற்றத்துக்குத் தயாராகிவிட்டது’
மலேசியாவில் மெளனமாக உள்ள பெரும்பான்மை மாற்றத்துக்குத் தயாராகிவிட்டது என்றும் தேர்தல் நாளில் அவர்கள் வெளியில் வருவார்கள் என்றும் அவர் சொன்னார்.
அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்யும் கிருஷ்ணா, தாமும் ஐந்து சக ஊழியர்களும் மாற்றரசுக் கட்சிக்கு வாக்களிக்க முடிவு செய்துவிட்டதாகக் கூறினார்.
“நாங்கள் கூட்டங்களுக்குப் போவதில்லை,அரசியல் பற்றி வெளிப்படையாகப் பேசுவதில்லை. ஆனால், 50 ஆண்டுகள் என்பது நீண்ட காலம். மாற்றத்தைச் செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டதாக எண்ணுகிறோம்”, என்றார்.
கெடாவில் பாரிசான் நேசனலையே நெடுங்காலமாக ஆதரித்து வரும் ஒரு குடியானவரான அப்துல்மாலிக், மாற்றரசுக் கட்சிக்கு வாக்களிக்கப் போவதாக தம் தந்தையாரிடம் தெரிவித்து விட்டார்.
“அவர்(தந்தை) மறுப்பு சொல்லவில்லை.சொந்த முடிவெடுக்கும் வயது எனக்கு வந்துவிட்டதாக சொன்னார்.அன்வார்தான் எங்களைப் போன்ற ஏழை மக்களுக்கு உதவுவார் என்று நம்புகிறேன்”, என்றார்.
ஆனால், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தேர்தலில் ஆளும் கட்சிதான் வெல்லும் என்று நம்புகிறார்.
“தங்களை வழிநடத்தும் ஆற்றலும் அனுபவமும் பாரிசான் நேசனலுக்குத்தான் உண்டு என்பதை மக்கள் அறிவார்கள்.அதனால், அடுத்த பொதுத் தேர்தலில் ஆளும் அதிகாரத்தை அவர்கள் எங்களுக்கே கொடுப்பார்கள் என்பதில் நம்பிக்கை கொண்டிருக்கிறேன்”, என்றார்.
மொனாஷ் பல்கலைக்கழகத்தின் கலை, சமூகவியல்துறை தலைவர் ஜேம்ஸ் சின், மாற்றரசுக் கட்சி, மக்கள்தொகையில் 25விழுக்காடாகவுள்ள சீனர்களின் பெரும்பகுதி ஆதரவை ஏற்கனவே பெற்றுவிட்டதுபோலத் தெரிகிறது என்றார்.
ஆனால், நாட்டின் 28 மில்லியன் மக்களில் 60 விழுக்காடாகவுள்ள மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெற அது மேலும் பாடுபட வேண்டியிருக்கும் என்று சின் நம்புகிறார்.
சுரேந்திரன் வேறொரு கணக்கைக் கூறினார்.மலாய்காரர்களில் 40-திலிருந்து 47 விழுக்காட்டினர்வரை மாற்றரசுக் கட்சிக்கு ஆதரவாக இருப்பது கட்சியின் கணக்கெடுப்பில் தெரிய வருவதாகக் கூறினார்.தேர்தலில் வெற்றிபெற அது போதும் என்றார்.
அப்படி இருந்தால் தேர்தலில் போட்டி கடுமையாகிவிடும். யாரும் வெற்றி பெறலாம் என்று சின் கூறினார்.
ஒருவேளை “தொங்கு நாடாளுமன்றம்கூட அமையலாம்”, என்றாரவர்.
– dpa