ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமை மன்ற மாநாட்டில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு முதல் கட்டமாக இதுவரை 22 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாநாட்டில் தமக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு இலங்கை அரசு இராஜதந்திர மட்டத்திலான காய்நகர்த்தல்களை முழுவீச்சுடன் முன்னெடுத்து வரும் தற்போதைய சூழ்நிலையில், தீர்மானத்தை ஆதரிப்பதற்கு 22 நாடுகள் அமெரிக்காவிடம் கூட்டாக இணக்கம் தெரிவித்துள்ளன என அங்கிருந்து வரும் தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது.
இன்று ஜெனிவாவில் இரண்டாம் கட்டமாக நடைபெறவிருக்கும் அமெரிக்காவின் இராஜதந்திர சந்திப்புகளில் மேலும் பல நாடுகள் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் என நம்பப்படுகின்றது.
முன்னதாக ஐ.நா.மனித உரிமைகள் மன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளிடம் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் சுருக்கத்தை ஒப்படைத்து தெளிவுபடுத்தல் நடவடிக்கையொன்றை அமெரிக்கா ஜெனிவாவில் ஆரம்பித்தது.
ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளுள் 24 நாடுகளின் ஆதரவு இருக்கும் பட்சத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றமுடியுமென நம்பப்படுகிறது.
அந்த அடிப்படையில், ஜெனிவாவில் அமெரிக்காவுக்கு ஆதரவு வலுத்துவருவதால் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படும் சாத்தியக்கூறு இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதேவேளை ஐ.நா மனித உரிமை மன்ற மாநாட்டில் இலங்கைக்கு ஆதரவாக மலேசியா செயல்படும் என அம்மாநாட்டில் கலந்துகொண்டுள்ள மலேசிய அதிகாரிகள் கோடிகாட்டினர் என்பது முன்னர் கிடைக்கப்பெற்ற செய்தி. எனினும், மலேசிய அரசின் தற்போதைய நிலை என்னவென்பது இன்னும் தெளிவாகவில்லை.