சிலாங்கூர் எம்பி:நாட்டின் ஜிடிபி-க்கு அதிகம் பங்களிப்பது நாங்களே

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)யில் கிட்டதட்ட கால்பகுதி சிலாங்கூரின் பங்களிப்பாகும். நேற்றிரவு மலேசிய வெளிநாட்டுச் செய்தியாளர் மன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் இதனைத் தெரிவித்தார்.

அது, புள்ளிவிபரத் துறையும் தலைமைக் கணக்காய்வாளரும் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் என்று அறிவித்த அவர், 2008-இல், பக்காத்தான் ரக்யாட் சிலாங்கூரில் ஆட்சிக்கு வந்த பின்னர், அம்மாநிலத்தில்  ஆயிரத்துக்கு மேற்பட்ட திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் 50,000த்துக்கு மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன என்றும் தெரிவித்தார்.

“அத்துடன் கடந்த 28  ஆண்டுகளில் இல்லாத வகையில் மாநிலத்தின் ரொக்கக் கையிருப்பை ரிம1.2பில்லியனாக உயர்த்தி ஒரு சாதனையை ஏற்படுத்தியுள்ளோம்.

“உயர்ந்த ரொக்கக் கையிருப்பு என்பது முக்கியமான ஒன்று.அது உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் பொருளகங்களுக்கும் ஒரு நம்பிக்கையைக் கொடுக்கும்”,என்றாரவர்.

ஒவ்வொரு மாநிலமும் கூட்டரசு அரசாங்கமும் விரயத்தைக் குறைக்க முடிந்தால் அவையும் ஆக்கம்தரும் பொருளாதார வளர்ச்சியைக் காண முடியும் என்று காலிட் குறிப்பிட்டார்.

மாநிலத்தில் நிதி சிறப்பாக நிர்வகிக்கப்படுவதால் மக்களுக்குப் பயனளிக்கும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் சமூகநலத் திட்டங்களையும் மேற்கொள்ள முடிகிறது.

“நாட்டின் பொருளாதாரத்துக்கு தலையாய பங்களிப்பைச் செய்யும் மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது.விடாமுயற்சியின் பயனாக நாட்டுக்குள் வந்த முதலீட்டில் 20விழுக்காடு சிலாங்கூருக்கு வந்தது”, என்றாரவர்.

2010-இல், வெளிநாட்டு, உள்நாட்டு முதலீடுகளில் 53விழுக்காடு பக்காத்தான் மாநிலங்களில் (சிலாங்கூர்,பினாங்கு,கிளந்தான்,கெடா)தான் செய்யப்பட்டது.

மக்களுக்கு உதவும் திட்டம் பற்றிக் குறிப்பிட்ட காலிட்,மேம்பாட்டைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதுடன் சிலாங்கூர் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும் மாநில அரசின் தலையாய நோக்கமாகும் என்று காலிட் குறிப்பிட்டார்.

தவறான நடவடிக்கையாக போனது

“ஜோம் பொருள்வாங்கும் திட்டத்தின் மூலம் மூத்த குடிமக்கள் பேரங்காடிகளில் ரிம100வரை பொருள்வாங்க உதவுகிறோம்.அவர்களுக்கு, உசேன் ஒன் கண்மருத்துவமனையுடன் இணைந்து மூத்த இலவச கண் பரிசோதனைகள் செய்ய ஏற்பாடுகள் செய்து வருகிறோம்”.

அவப்பேறாக, மாநிலக் குடிநீர் வளத்தைத் தனியார் மயப்படுத்தியது தப்பாக போய்விட்டது என்றும் அதனால் மக்கள் பயனடையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

“மாநிலத்தில் நீர் கட்டணத்தை உயர்த்த அதிகாரிகள் திட்டமிடுவதை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம்.நாங்கள் இலவச நீர் வழங்க முயன்று வரும் வேளையில் ஸபாஷ் மக்களுக்குச் சுமையை உண்டுபண்ணப் பார்க்கிறது”,என்றார்.

2008 பொதுத் தேர்தலுக்கு முன்னர் சிலாங்கூரைக் கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கைக்கூட பக்காத்தானுக்கு இருந்ததில்லை என்று காலிட் தெரிவித்தார்.

“ஆனால்,இப்போது எங்கள் கவனமெல்லாம் புத்ராஜெயாவைக் கைப்பற்றுவதில் உள்ளது.அது, யாருக்கு வாக்களிப்பதென்று முடிவுசெய்யாமல் இருக்கிறார்களே அந்த வாக்காளர்கள் எந்தப் பக்கம் சாய்கிறார்கள் என்பதைப் பொறுத்துள்ளது.புத்ராஜெயாவில் பக்காத்தான் காலூன்ற நாங்கள் சாபா, சரவாக்கும் முக்கிய பங்காற்ற வேண்டும்”, என்று காலிட் குறிப்பிட்டார்.