பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் புதல்வியின் திருமண நிச்சயதார்த்த விருந்து செலவுகளுக்கான கட்டணத்தை அரசாங்கம் செலுத்தியதற்கான ஆதாரத்தை இன்று பிகேஆர் வெளியிட்டது.
அந்த ஸ்ரீ பெர்டானா நிகழ்வு விருந்துக்கான உணவை வழங்கிய ஷங்ரிலா ஹோட்டலின் விருந்து நிகழ்வு அளிப்பாணையை காட்டிய பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் அந்த விருந்தை ஒட்டி 409,767 ரிங்கிட்டுக்கான பில் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டதாகச் சொன்னார்.
“அது சிறிய விஷயமாக இருக்கலாம். அது 409,767 ரிங்கிட்டாக இருக்கலாம். ஆனால் அது பிரதமர் முதல் அவரது அமைச்சர்கள் வரையில் தங்கள் தனிப்பட்ட ஆடம்பரத்துக்கு மக்கள் வரிப் பணத்தை பயன்படுத்தும் அரசாங்கத்தின் மெத்தனப் போக்கை காட்டுகிறது”, என்றார் அவர்.
பெர்டானா புத்ரா வளாகத்தில் 2011ம் ஆண்டு ஜுன் 17ம் தேதி நிகழ்ந்த அந்த விருத்துக்கான பில் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதை ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட ஆவணத்தின் பிரதிகள் காட்டின.
நஜிப்-பின் புதல்வியான நூர்யானா நாஜ்வாவுக்கும் கஸக்ஸ்தானைச் சேர்ந்த டேனியர் நஸர்பாயேவ்-வுக்கும் இடையிலான திருமண நிச்சயதார்த்தம் புத்ராஜெயாவில் உள்ள பிரதமருடைய அதிகாரத்துவ இல்லமான ஸ்ரீ பெர்டானாவில் அன்றைய தினம் இரவு நடைபெற்றதாக பெர்னாமா கடந்த ஆண்டு தகவல் வெளியிட்டது.
பிரதமர் அலுவலக கணக்கின் கீழ் செய்யப்பட்ட அந்த பதிவுக்கு தொடர்பு கொள்வதற்கு முக்கியமான மனிதராக பிரதமரின் தனிப்பட்ட செயலாளர் முகமட் போஆட் ஜெலானி அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
பிரதமர் அலுவலகம் 2011 ஜுன் 11ம் தேதியிடப்பட்ட உத்தரவாதக் கடிதத்தை வெளியிட்டுள்ளதையும் ஷாங்ரிலா ஹோட்டல் பில் கட்டணத்தில் குறிப்பிட்டுள்ளது.
தனிப்பட்ட நிகழ்வுக்குப் பிரதமர் அலுவலகம் பயன்படுத்தப்பட்டிருப்பதால் அந்த விவகாரம் மீது பிரதமர் தெளிவுபடுத்துவது அவசியம் என ராபிஸி வலியுறுத்தினார்.