பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயிலும் அந்தக் கட்சியின் மகளிர் தலைவி சுராய்டா கமாருதினும் அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலிலுக்கு மீது இன்று காலை எதிர் வழக்கைச் சமர்பித்துள்ளனர்.
என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் தொடர்பில் நிகழ்ந்துள்ளதாக கூறப்படும் அதிகார அத்துமீறல்கள் திறந்த நீதிமன்றத்தில் அம்பலப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக அந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என ராபிஸி இன்று நிருபர்களிடம் கூறினார்.
“முக்கியமான ஆவணங்களும் மூத்த பிஎன் தலைமைத்துவமும் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்படுவதைத் தவிர்ப்பதற்காக வாதி, வழக்கு விசாரணையைத் தாமதப்படுத்த அல்லது வழக்கை விரைவில் மீட்டுக் கொள்ள விரும்பக் கூடும் என நான் அஞ்சுகிறேன்,” என்றார் அவர்.
அந்த மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் தங்கள் மீது தொடுத்துள்ள அவதூறு வழக்கில் தங்களது பிரதிவாதித் தரப்பு பதிலையும் ராபிஸி, சுராய்டா ஆகியோர் இன்று சம்ர்பித்தனர்.
அந்தப் பதில் ஷாரிஸாட்டின் வழக்குரைஞர் நிறுவனமான Muhammad Shafee and Co வுக்கு இன்று பிற்பகல் அனுப்பப்பட்டது.
ஷாரிஸாட்டின் கணவருக்கும் மூன்று பிள்ளைகளுக்கும் சொந்தமான என்எப்சி சம்பந்தப்பட்ட விஷயங்களை வெளிப்படுத்தும் போது ராபிஸியும் சுராய்டாவும் தமக்கு எதிராக அவதூறு கூறியுள்ளதாக ஷாரிஸாட் தமது வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.
கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று காலை சமர்பிக்கப்பட்ட ஷாரிஸாட் மீதான எதிர் வழக்கு 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் தேதி “அம்னோ மகளிர் பேரவையைத் தொடக்கி வைத்து ஆற்றிய உரையில் காணப்படும் அவதூறுகளுடன்” தொடர்புடையது என ராபிஸி சொன்னார்.
“அந்த விவகாரம் மீது ஷாரிஸாட்டும் பிஎன் தலைமைத்துவமும் மக்களை எதிர்கொள்வதை இனிமேலும் தவிர்க்க முடியாது.”
“என்எப்சி ஊழலுக்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பிரதமரும் மற்ற பிஎன் மூத்த தலைவர்களும் தீவிரம் காட்டாமல் இருக்கலாம். ஆனால் நீதிமன்றம் அதற்கு இடம் அளிக்கும் என நான் நிச்சயமாக நம்புகிறேன். அதன் வழி அத்தகைய அத்துமீறல்கள் பொது மக்களுக்குத் தெரியப்படுத்தப்படும்,” என அவர் மேலும் சொன்னார்.