சிலாங்கூர் பண்டார் உத்தாமாவில் உள்ள தமிழ் தொடக்கப் பள்ளி ஒன்றுக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தைத் திரும்ப ஒப்படைக்குமாறு மஇகாவை கேட்டுக் கொள்ளும் மகஜர் ஒன்றை தமிழர் உரிமைப் போராட்ட அரசு சாரா அமைப்பு ஒன்று இன்று அந்தக் கட்சியிடம் வழங்கியுள்ளது.
“நமது பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக அந்த மூன்று ஏக்கர் நிலத்தையும் எஃபிங்காம் தேசிய வகைத் தொடக்கத் தமிழ்ப்பள்ளிக் கூடத்திடம் மஇகா உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என மக்கள் நலன் உரிமை கூட்டணி (Power) விரும்புகிறது”, என மஇகா தலைவர் ஜி பழனிவேலுக்கு அனுப்பப்பட்ட அந்த மகஜர் கூறியது.
அந்த விவகாரம் மீது தீர்வு காண மஇகா தலைமைத்துவத்துடன் கலந்துரையாடவும் அந்த அமைப்பு விரும்புகிறது. அத்துடன் அந்த நிலத்துக்கு செலுத்தப்பட்டுள்ள பிரிமியம் தொகைக்கு இழப்பீடு கொடுக்கவும் அது தயாராக உள்ளது.
கோலாலம்பூரில் உள்ள மஇகா தலைமையகத்தில் அந்த மகஜர் பற்றிய விவரங்களை விளக்க பவர் அமைப்பின் தலைவர் கோபி கிருஷ்ணனும் ஐவர் கொண்ட அவரது குழுவினரும் ஐந்து நிமிடங்கள் எடுத்துக் கொண்டனர். பின்னர் அதனை பழனிவேலின் உதவியாளரிடம் கொடுத்தனர்.
அந்த நிகழ்வைக் கவனிப்பதற்காக தியான் சுவா என அழைக்கப்படும் பத்து எம்பி சுவா தியான் சிங் அங்கு இருந்தார்.
அதே வேளையில் பெட்டாலிங் ஜெயா செலத்தான் மஇகா தலைவரும் செனட்டருமான வி சுப்ரமணியமும் அங்கு இருந்தார்.
அந்தக் கட்டிடத்தின் வளாகத்தில் மகஜர் உதவியாளரிடம் சமர்பிக்கப்படும் போது வெளியில் குறைந்தது 20 போலீஸ்காரர்களும் 10 மஇகா உறுப்பினர்களும் நின்று கொண்டிருந்தனர்.
மஇகா எந்த நடவடிக்கையும் எடுக்கா விட்டால் அந்த அமைப்பு நாடாளுமன்றத்துக்கு ஊர்வலமாகச் செல்லும் என கோபி பின்னர் நிருபர்களிடம் கூறினார். சிலாங்கூர் அரசாங்கத்திடமும் அந்த விஷயம் எழுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
“இது மிகவும் வருத்தமளிக்கும் விஷயம். ஏனெனில் நாம் தமிழ்ப்பள்ளிக்கூடங்களின் பாதுகாவலர்கள், தமிழ்ப் பிள்ளைகளின் பாதுகாவலர்கள் என நாம் கூறிக் கொள்கிறோம். இருந்தும் இவ்வாறு நிகழ்கிறது,” என்றார் அவர்.
நன்கொடைகள் மூலம் நிலக் கட்டணத்துக்காக 750,000 ரிங்கிட்டைத் திரட்ட தமது அமைப்பு எண்ணியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
1996ம் ஆண்டு பண்டார் உத்தாமா மேம்பாட்டு நிறுவனம் எஃபிங்காம் தேசிய வகைத் தொடக்கத் தமிழ்ப்பள்ளிக்கூடத்துக்கு ஆறு ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது. ஆனால் அந்த நிலம் அப்போதைய பிஎன் அரசாங்கத்திடம் 2005ம் ஆண்டு ஒப்படைக்கப்பட்ட பின்னர் அது இரண்டு மனைகளாக மஇகாவுக்கும் பள்ளிக்கூடத்துக்கும் இடையில் பிரிக்கப்பட்டது.
2008 இல் அந்த விவகாரம் பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது அதில் தவறு நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுவதை அப்போதைய மஇகா தலைமைச் செயலாளர் எஸ் சுப்ரமணியம் மறுத்தார்.