நூர்யானா விருந்துச் செலவுகளுக்குப் பணம் கொடுத்ததை பிரதமர் அலுவலகம் மறுக்கிறது

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் புதல்வியின் திருமண நிச்சயதார்த்திற்கான செலவுகளுக்கு பிரதமர் அலுவலகம் பணம் கொடுத்ததாகக் கூறப்படுவதை அந்த அலுவலகம் மறுத்துள்ளது.

அந்த நிகழ்வுகளுக்கான செலவுகளை பிரதமரும் அவரது குடும்பமும் ஏற்றுக் கொண்டதாக பிரதமருடைய பத்திரிக்கைச் செயலாளர் நேற்றிரவு விடுத்த இரண்டு பக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“அந்தக் குற்றச்சாட்டுக்களுக்காக பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் மன்னிப்புக் கேட்க வேண்டும். அந்தக் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை, அவதூறானவை, பிரதமரது தோற்றத்துக்குக் களங்கத்தை விளைவிக்க வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் முயற்சி.” 

“அவரது புதல்வியின் திருமண நிச்சயதார்த்த விருந்துச் செலவுகளுக்கு பணம் கொடுக்க பொது நிதிகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. அதற்கான பணத்தை பிரதமரும் அவரது குடும்பமும் சொந்தமாக செலுத்தின”, என அந்த அறிக்கை மேலும் கூறியது.

என்றாலும் அந்த அறிக்கை தமது குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக ராபிஸி காட்டிய ஆவணத்தின் உண்மை நிலை குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் புதல்வியின் திருமண நிச்சயதார்த்த விருந்து செலவுகளுக்கான கட்டணத்தை அரசாங்கம் செலுத்தியதற்கான ஆதாரத்தை நேற்று காலை ராபிஸி வெளியிட்டார்.

கடந்த ஆண்டு ஜுன் மாதம் 17ம் தேதி ஸ்ரீ பெர்டானாவில்  நிகழ்ந்த அந்த விருந்துக்கான 409,767 ரிங்கிட்டுக்கான ஷங்ரிலா ஹோட்டல் பில் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டதாக ராபிஸி சொன்னார்.

தனிப்பட்ட நிகழ்வு ஒன்றுக்கு பணம் கொடுக்க பிரதமர் அலுவலகம் பயன்படுத்தப்பட்டுள்ளதை அந்த ஆவணம் தெளிவாக காட்டுகிறது என்றார் அவர்.

“அவர் பின்னர் சொந்தப் பணத்தை அந்த நிகழ்வுக்காக செலுத்தியிருந்தாலும் அவர் தனிப்பட்ட நிகழ்வு ஒன்றுக்கு பிரதமர் அலுவலகம் வழியாக பணம் கொடுத்திருக்கக் கூடாது. ஏனெனில் அது தார்மீக விஷயமாகும்.”

நஜிப் புதல்வி நூர்யானா நாஜ்வாவுக்கும் கஸக்ஸ்தானைச் சேர்ந்த டேனியர் நாஸார்பாயேவுக்கும் இடையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

அந்தத் திருமண நிச்சயதார்த்த முந்திய சடங்குகளுக்காக கஸக்ஸ்தானில் உள்ள ஆஸ்தானாவுக்கு  கடந்த ஆண்டு நஜிப் குடும்பம் மேற்கொண்ட பயணத்துக்கான செலவுகளுக்கும் பொது நிதிகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டதைத் தொடர்ந்தும் சர்ச்சை எழுந்தது.