பெர்சே ஆர்வலர் சரவாக் நுழையத் தடை(விரிவாக)

பெர்சே 2.0 இயக்கக்குழு உறுப்பினர் மரியா சின் அப்துல்லா சரவாக்கில் கால்வைக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அவர் இன்று காலை  கூச்சிங் விமான நிலையம் சென்றடைந்தபோது குடிநுழைவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

“அது மாநில அரசின் உத்தரவு என்றவர்கள் கூறினர்.சரவாக் செல்ல விரும்பினால் முதலமைச்சர் அலுவலகத்துக்கு எழுதி அனுமதி பெற வேண்டும் என்றும் கூறப்பட்டது”, என்று மரியா சொன்னார். 

அவர் சரவாக் சென்று அங்குள்ள பெர்சே ஆர்வலர்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார்.

திருப்பி அனுப்பப்பட்ட நான்காவது பெர்சே தலைவர்

கடந்த ஆண்டு ஏப்ரலில், பெர்சே 2.0 தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசனும், அதன் இயக்கக்குழு உறுப்பினர் வொங் சின் ஹுவாட் இயக்கக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஹரிஸ் இப்ராகிம் ஆகியோரும் அம்மாநிலத்துக்குள் செல்வதினின்றும் தடுக்கப்பட்டனர்.

அத்தடை உத்தரவை எதிர்த்து அம்பிகா கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். ஆனால், வெற்றி பெறவில்லை.

விமான நிலையத்தில் குடிநுழைவுத் துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட மரியா, அவரின் வழக்குரைஞரைச் சந்திக்கவும் அனுமதிக்கப்படவில்லை.

“வெளியில் வழக்குரைஞர் காத்திருந்தார். ஆனால், அவரைச் சந்திக்க அனுமதிக்கவில்லை. கோலாலம்பூர் திரும்பியதும் சந்திக்கலாம் என்று கூறி விட்டனர்”, என மரியா தெரிவித்தார்.

மேல் நடவடிக்கை குறித்து தம் வழக்குரைஞர்களுடன் ஆலோசிக்கப் போவதாக அவர் சொன்னார்.

இதனிடையே பெர்சே 2.0 இயக்கக்குழு, சரவாக் மாநில அரசு அதிகாரத்தைமீறி நடந்துகொண்டிருப்பதாகக் கண்டித்துள்ளது.