என்எப்சி ஊழல் விவகாரத்தில் இன்னும் சிலர் மீது குற்றம் சாட்டப்படலாம்

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்துக்கு அரசாங்கம் வழங்கிய 250 மில்லியன் ரிங்கிட் எளிய கடன் சம்பந்தப்பட்ட ஊழல் தொடர்பில் அந்த நிறுவனத்தின் மூத்த நிர்வாக அதிகாரி உட்பட மேலும் நால்வர் மீது குற்றம் சாட்டப்படலாம்.

அந்த என்எப்சி இயக்குநர்கள் வாரியத்தில் உள்ள “இரண்டு முதல் மூன்று” அரசாங்க நியமனதாரர்கள் மீது 1965ம் ஆண்டுக்கான நிறுவனச் சட்டத்தின் 132வது பிரிவின் கீழ் கவனக் குறைவாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்படலாம் என நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

நம்பிக்கை மோசடிக்காக என்எப்சி-யின்  “மூத்த நிர்வாக அதிகாரி” ஒருவரும் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்படலாம் என அடையாளம் கூற விரும்பாத வட்டாரங்களை மேற்கோள் காட்டிய அந்தச் செய்தி குறிப்பிட்டது..

என்எப்சி-யுடன் தொடர்பு இல்லாத ஆனால் என்எப்சி இயக்குநர்களுக்குச் சொந்தமான தனியார் நிறுவனங்களுக்கு என்எப்சி நிறுவன நிதிகளை மாற்றி விடுவதற்கு அனுமதித்ததற்காக அவர் விசாரிக்கப்படுவதாகத் தெரிகிறது.

அந்த நாளேடு அது குறித்து சட்டத் துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்லிடம் வினவியது. அதற்குப் பதில் அளித்த அவர் அந்த விவகாரம் “முடிவதற்கு இன்னும் வெகு தொலைவு இருப்பதாக” சொன்னார்.

சாலே ஊழல் குற்றச்சாட்டின் பேரிலும் விசாரிக்கப்படுகிறார்

கடந்த திங்கட்கிழமை இரண்டு நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டுக்களும் நிறுவனச் சட்டத்தை மீறியதாக இரண்டு குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்ட என்எப்சி தலைவர் முகமட் சாலே இஸ்மாயில் ஊழலுக்காகவும் விசாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

முகமட் சாலே-க்கு ஆலோசகராகப் பணியாற்றிய போது அவரை ஏமாற்றியதாக ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டுள்ள சம்சுபாஹ்ரென் இஸ்மாயிலையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்கிறது.

மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சருமான ஷாரிஸாட் அப்துல் ஜலிலின் கணவரான முகமட் சாலே தங்களது மூன்று பிள்ளைகளுடன் என்எப்சி-யை நடத்தி வருகின்றனர். அரசாங்கத்திற்கு என்எப்சி-க்கு கணிசமான பங்குகள் உள்ளன.

என்எப்சி-யுடன் தொடர்புடைய National Meat and Livestock Corporation உட்பட பல கூட்டு நிறுவனங்களையும் ஷாரிஸாட் குடும்பம் நடத்தி வருகிறது. அவற்றில் அரசாங்கத்துக்கு எந்தப் பங்கும் இல்லை.

National Meat and Livestock Corporation-க்கு என்எப்சி நிதிகளிலிருந்து 49.76 மில்லியன் ரிங்கிட்டை மாற்றியதாகவும் முகமட் சாலே மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்தப் பணம் இரண்டு ஆடம்பர அடுக்கு மாடி வீடுகளை கொள்முதல் செய்தது உட்பட மற்ற செலவுகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

TAGS: