பொதுத் தேர்தல் எப்போது? ஆருடங்கள் வலுக்கின்றன

இப்போது மலேசியர்கள் எங்கு கூடினாலும் அங்கு13வது பொதுத் தேர்தல் தேதி பற்றி விவாதிப்பது வழக்கமாகி விட்டது.

பொதுத் தேர்தலுக்கான தேதியை முடிவு செய்யும் உரிமை பிரதமருக்கு மட்டுமே உண்டு.அதை முடிவு செய்ததும் அவர் நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு பேரரசருக்கு ஆலோசனை கூறுவார்.நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும் தேர்தல் ஆணையம்(இசி) வேட்புமனு தாக்கல் செய்யும் நாளையும் வாக்களிப்பு நாளையும் நிர்ணயம் செய்யும்.

பல காரணக்கூறுகளை வைத்து நாடாளுமன்றம் மே அல்லது ஜூனில் கலைக்கப்படலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட 60 நாள்களுக்குள் பொதுத் தேர்தல் நடைபெறும்.

முதலாவதாக,நஜிப் பொதுச் சேவைக்கான புதிய சம்பளத் திட்டத்தை(எஸ்பிபிஏ) ரத்துச் செய்து அதைவிட மேம்பட்ட மலேசிய சம்பளத் திட்டத்தை(எஸ்எஸ்எம்)க் கொண்டு வந்தது.

அது,வாக்காளர்களில் கணிசமான எண்ணிக்கையினராக திகழும் 1.4மில்லியன் அரசு ஊழியர்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் அதற்குத் தீர்வுகாண்பது முக்கியமாகும்.

இரண்டாவதாக, பிரதமர் நஜிப்பும் துணைப்பிரதமர் முகைதின் யாசினும் 2010 அம்னோ பேரவைக்குப் பின் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் வாக்களித்ததுபோல்  நாடுமுழுக்க  பயணம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு வாரக்கடைசியிலும் தவறாமல் பயணம் மேற்கொள்வதையும் மக்களைச் சந்திப்பதையும் அவர்கள் வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அஹ்மட் மஸ்லான்(இடம்) தேர்தல் முரசு கொட்டத் தொடங்கிவிட்டார். பிஎன், குறிப்பாக அம்னோ அதன் தேர்தல் இயந்திரத்தை முடுக்கி விட வேண்டும் என்று கேட்டுகொண்டிருப்பதே இதற்குச் சான்று.

மூன்றாவதாக, அம்னோ பேரவைக் கூட்டம், 2013 செப்டம்பர்வரை 18மாதங்களுக்குத் தள்ளி வைக்கப்பட்டிருப்பது.

நான்காவதாக, பொருளாதார ஆய்வுக்கும் ஆலோசனைக்கும் உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் வணிகக் குழு(ஒபிஜி), மலேசிய பொருளாதார வளர்ச்சி 2012-இலும் தொடரும் என்று கூறியிருப்பது.

அதன் அறிக்கை மலேசியாவில் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்திருப்பதாகவும் பணவீக்கம் கட்டுப்படுத்தப் பட்டிருப்பதாகவும் நிதித்துறை திடமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

எல்லாக் கண்களும் ஜூன்மீது

இசி-யும் 2012 மே மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்று குறிப்புக் காட்டியிருக்கிறது. நடாளுமன்றம் மே-இல் கலைக்கப்பட்டால் 60 நாள்களில்- மே அல்லது ஜூன் மாதத்தில்- தேர்தலை நடத்தியாக வேண்டும்.

பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் ஆயுப், ஜூன் மாதத் தொடக்கத்தில் தேர்தல் நடைபெறலாம் என்று நினைக்கிறார். அது பள்ளி விடுமுறைக்காலம் என்பதால் அதற்கான வாய்ப்பு நிறைய உண்டு என்றவர் கருதுகிறார்.

“நாடாளுமன்றம்,சில முக்கியமான சட்டத் திருத்தங்களை, பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரி சட்டத் திருத்தம்(ஏயுகேயு), உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம்(ஐஎஸ்ஏ) போன்றவற்றை விவாதிக்க வேண்டியுள்ளது”, என்றாரவர்.

மக்களவை துணைத்தலைவர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜப்பார், முடிவுறாத விவகாரங்களைப் புதிய நாடாளுமன்றத்திலும் பேசலாம் என்கிறார்.

“சட்ட முன்வரைவுகள், தீர்மானங்கள் முதலிய முடிவடையா விவகாரங்களை நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தில் பேசலாம்.அது ஒரு பிரச்னை அல்ல”, என்றாரவர்.

தேர்தல் தேதி பற்றி போட்டிபோட்டுக்கொண்டு ஊகங்கள் தெரிவிக்கும் விளையாட்டு கடந்த ஆண்டே தொடங்கி விட்டது.சிலர் 2011 ஜூலையில் தேர்தல் என்றார்கள்,சிலர் 2011 நவம்பர் 11 என்றார்கள்.11ஆம் எண் நஜிப்புக்கு மிகவும் பிடித்தமான எண்ணாம்.

இப்போது வரும் அறிக்கைகள் ஜூன் 3-இல் நடக்கலாம் என்று ஆருடம் கூறுகின்றன.

ஆக, ஜூன் மாதமே பெரிதும் எதிர்பார்க்கப்படும் மாதமாகிறது.எனவே, அந்த மாதத்தில் தேர்தல் நடந்தால் அது ஆச்சரியத்தைத் தராது.ஆனால், பிரதமர் எந்தத் தேதியை முடிவு செய்திருக்கிறாரோ, யாருக்குத் தெரியும்? 

-பெர்னாமா