இண்ட்ராப் இனவாத-எதிர்ப்பு மகஜரை ஐநாவிடம் வழங்கும்

மார்ச் 21-இல், ஐநா தலைமைச் செயலாளர் பான் கி மூன் மலேசியா வரும்போது பாகுபாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மகஜர் ஒன்றை இண்ட்ராப் அவரிடம் வழங்கும்.

கூட்டரசு அரசமைப்பின் 153வது பகுதியில் காணப்படும்  “இனவாதக் கூறுகளை”க் கவனப்படுத்தும் நோக்கில் அவ்வாறு செய்யப்படும் என்று இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

அப்போதைய மலாயாவின் சமூக பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிவிட்ட மலாய்க்காரர்களுக்கு உதவும் நோக்கத்தைக் கொண்டது கூட்டரசு அரசமைப்பின் 153வது பகுதி.

“ஆனால்,1957-இல், மலாயா இந்தியர்களில் 95விழுக்காட்டினர் சொந்த நிலமின்றியும் குடியுரிமையின்றியும் பிரிட்டிஷ் முதலீட்டாளர்கள், சந்தர்ப்பவாதிகள் ஆகியோரின் தயவில் அடிமை வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்ததை பிரிட்டிஷ் அரசு ஏனோ உணரவில்லை”, என்று வேதமூர்த்தி கூறினார்.

அப்போதைய கூட்டணி அரசு, பிரிட்டனுடன் சேர்ந்து இனவாதம் தொனிக்கும் அப்படியொரு சட்டவிதியை உருவாக்கியது.அது தற்காலிகமாக இருந்துவிட்டுப் போயிருக்க வேண்டியது.ஆனால், நிரந்தரமாகி விட்டது என்றவர் கூறினார்.

“இன்று 55 ஆண்டுக்கால சுதந்திரத்துக்குப் பின்னர் அரசமைப்பு பகுதி 153, குறிப்பிட்ட ஓர் இனத்தை முன்னேற்றவும் மற்ற சிறுபான்மை மக்களின் உரிமைகளை மறுக்கவும் பயன்படுத்தப்படுவதால் மலேசியர்கள் தொடர்ந்து துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்”, என்றாரவர்.

ஐநா தலைமைச் செயலாளர்,அனைத்துலக இனப்பாகுபாட்டை ஒழிக்கும் நாளில் மலேசியாவுக்கு வருகை புரிகிறார்.

இண்ட்ராப் பதின்மர் அடங்கிய ஒரு குழுவை கோலாலம்பூர் ஐநா அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கும் என்று தெரிகிறது.

“மற்ற சமூகங்கள் குறிப்பாக ஓராங் அஸ்லிகளும் பாதிக்கப்பட்டிருப்பதை இண்ட்ராப் உணர்கிறது.

“ 55ஆண்டுக்கால சுதந்திரத்துக்குப் பின்னர், இனவாதமிக்க இச்சட்டவிதி அகற்றப்பட்டு மலேசியர்கள் சகவாழ்வு வாழவும் உழைப்பின் பயனைச் சமமாகவும் கெளரவமாகவும் உண்டு மகிழவும் உரிமை கொடுக்கப்பட வேண்டிய தருணம் வந்துவிட்டது”, என்று வேதமூர்த்தி கூறினார்.