பக்காத்தான், மகளிரை அவமதிப்பதாக மசீச கூறுகிறது

கடந்த வியாழக்கிழமையன்று நிகழ்ந்த கருத்தரங்கு ஒன்றில் பக்காத்தான் ராக்யாட் ஆதரவாளர்கள் பினாங்கு மசீச மகளிர் தலைவி தான் செங் லியாங்-கை வாய்மொழியாக புண்படுத்தியதாக கூறி மசீச பெலியாவானிஸ் தலைவி தீ ஹுய் லிங் அந்த எதிர்த்தரப்புக் கூட்டணியைச் சாடியிருக்கிறார்.

அனைத்துலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டதற்கு  சில நாட்கள் கழித்து அந்த விவாதம் நடைபெற்றுள்ளதைப் பார்க்கும் போது பினாங்கு மசீச மகளிர் தலைவியை பக்காத்தான் ஆதரவாளர்கள் கேலி செய்யும் அளவுக்குத்  தாழ்ந்து சென்றுள்ளது வெட்கக் கேடானது மட்டுமல்ல. அவர்கள் முதிர்ச்சி அடையவில்லை என்பதையும் காட்டுகிறது,” என அவர் இன்று விடுத்த அறிக்கை கூறியது.

“பக்காத்தான் ஆதரவாளர்கள் தங்கள் கருத்தை வலியுறுத்தவும் இலட்சியத்தை அடையவும் வன்முறையைப் பயன்படுத்தவும் தயங்க மாட்டார்கள் என்பதையும் அது உணர்த்துகிறது.”

உள்ளூர் நாளேடான குவோங் வா யிட் போ ஏற்பாடு செய்த அந்த பினாங்குக் கருத்தரங்கில் பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் கூறியதாக சொல்லப்படும் செக்ஸ் கருத்துக்களை தான் செங் லியாங் எடுத்துரைத்த போது பக்காத்தான் ஆதரவளர்கள் கூச்சலிட்டதுடன் அவரை “முதிய கோழி”  என்றும் அழைத்ததாகச் சொல்லப்படுகிறது.

பக்காத்தான் ஆதரவாளர்கள் நடந்து கொண்ட முறை அண்மையில் மசீச தலைவர் சுவா சொய் லெக்-கிற்கும் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்-கிற்கும் இடையில் நிகழ்ந்த சொற்போரின் போது மசீச ஆதரவாளர்கள் நடந்து கொண்ட முறைக்கு நேர்மாறாக உள்ளது என தீ சொன்னார்.

“லிம் குவான் எங் பேசிய போது மசீச உறுப்பினர்கள் ஒரு போதும் குறுக்கிட்டதில்லை. டிஏபி தலைவர்கள் பேசிய மற்ற நிகழ்வுகளிலும் கூட மசீச ஆதரவாளர்கள் தங்கள் நேரத்துக்குக் காத்திருந்து கருத்துக்களைத் தெரிவித்தார். துரதிர்ஷ்டவசமாக அந்த நாகரீகம் தான் செங் லியாங்-கிற்கு கொடுக்கப்படவில்லை,” என்றார் அவர்.