ஹசான் சுயேச்சையாக சட்ட மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளது குறித்து மகிழ்ச்சி

பாஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கோம்பாக் சட்ட மன்ற உறுப்பினர் ஹசான் அலி இன்று சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தில் சுயேச்சை உறுப்பினராகக் கலந்து கொண்டார்.

புதிய ஏற்பாட்டில் தமக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்றும் அவர் சொன்னார்.

“எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நான் பாஸ் கட்சியிலிருந்து கௌரவமாக நீக்கப்பட்டேன். அது ஊழல் பற்றியது அல்ல. குதப்புணர்ச்சி பற்றியதும் அல்ல,” என அவர் இன்றையக் கூட்டம் பற்றி வினவப்பட்ட போது கிண்டலாகக் கூறினார்.

இரண்டு வாரங்களுக்கு நிகழும் சட்டமன்றக் கூட்டத்தில் தமது பேரணிகளில் அடிக்கடி வலியுறுத்தி வரும் இனம், சமயம், அரசர் அமைப்பு பற்றிய விஷயங்களை எழுப்பப் போவதாகவும் ஹசான் சொன்னார்.

மலாய் சிறப்புரிமைகள் “காணாமல் போகும் மருட்டலுக்கு” இலக்காகியிருப்பதாக கூறிக் கொண்ட அவர் அது பற்றி சட்டமன்றம் விவாதிக்க வேண்டும் என்றார்.

“நான் அந்த விஷயத்தைத் தொடர்ந்து எழுப்பி வருவேன்,” என்றும் ஹசான் சொன்னார்.

சிலாங்கூர் சுல்தான் சட்டமன்றக் கூட்டத் தொடரைத் தொடக்கி வைத்தார்.