56ஆண்டுகள் அம்னோ உறுப்பினராக இருந்துவந்த காடிர் சேக் ஃபாடிர் இன்று அதிலிருந்து விலகினார்.
“கடந்த வாரம், கூலிம் பண்டார் பாரு அம்னோ தொகுதியின் பொருளாளர் பதவியிலிருந்து விலகினேன்.இன்று கட்சி உறுப்பினர் என்ற நிலையிலிருந்தும் விலகுவதாக தலைமைச் செயலாளருக்குக் கடிதம் அனுப்பி விட்டேன்”, என்றவர் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், தம் கட்சிவிலகலுக்கான காரணத்தை அவர் குறிப்பிடவில்லை.
12வது பொதுத் தேர்தலில், கெடா கூலிம் பண்டார் பாருவில் பிஎன் பணம் கொடுத்து வாக்குகள் வாங்கியதாக காடிர் குறிப்பிட்டது தொடர்பில் கட்சியின் ஒழுங்குக் குழு அவர்மீது நடவடிக்கை எடுக்க முடிவுசெய்துள்ள வேளையில் அவரது கட்சிவிலகல் அறிவிப்பு வந்துள்ளது.
காடிர்,73,அம்னோ உச்சமன்ற உறுப்பினராக 24 ஆண்டுகள் இருந்துள்ளார்.அதற்குமுன் 10 ஆண்டுகள் அம்னோ இளைஞர் செயலவையில் இருந்தார்.
1999-இல் அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அவரை சுற்றுலா, கலை, பண்பாட்டு அமைச்சராக நியமித்தார்.
அப்துல்லா அஹமட் படாவியின் நிர்வாகத்தில் காடிர், தகவல் அமைச்சரானார். 2006-இல் அவர் அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
இப்போது அவர், அம்னோ மூத்த தலைவர் தெங்கு ரசாலி ஹம்சாவைத் தலைவராகக் கொண்டுள்ள அங்காத்தான் அமானா ரக்யாட் என்னும் என்ஜிஓ-வின் துணைத் தலைவராக உள்ளார்.