பெமாண்டு: உதவித் தொகைகளைக் குறைப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

கூட்டரசு அரசாங்கம், வாழ்க்கைச் செலவுகள் உயர்ந்திருப்பதைக் கருத்தில் கொண்டு  உதவித் தொகைகளைக் குறைப்பதை மேலும் குறைக்கும் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது.

இவ்வாறு பெமாண்டு எனப்படும் அடைவு நிலை நிர்வாக, பட்டுவாடாப் பிரிவு அறிவித்துள்ளது.

ஆனால் அந்த நடவடிக்கை தற்காலிகமானதே என்று பிரதமர் துறையில் இயங்கும் சிந்தனைக் களஞ்சியமான பெமாண்டு கூறியதாகவும் நன்யாங் சியாங் பாவ் நாளேட்டின் அண்மைய செய்தி ஒன்று தெரிவித்தது.

பெமாண்டு ஒரு காலத்தில் உதவித் தொகைகளுக்கான செலவுகள் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு புத்ராஜெயா அறிவித்த “உதவித் தொகை சீரமைப்பு” திட்டத்தை தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தது.

2012ம் ஆண்டு உதவித் தொகைகளுக்காக தான் 33.2 பில்லியன் ரிங்கிட் செலவு செய்ய வேண்டியிருக்கும் புத்ராஜெயா மதிப்பிட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் பற்றக்குறை கூடுவதற்கும் அதுவே காரணம் என்றும் அது கூறியது.

சீனி, எரிபொருள், மின் கட்டணம் ஆகியவை சம்பந்தப்பட்ட உதவித் தொகைக் குறைப்பு கடைசியாக கடந்த ஆண்டு ஜுன் மாதம் மேற்கொள்ளப்பட்டது.

உதவித் தொகை மறுசீரமைப்புத் திட்டம் அவசியம் என வலியுறுத்திய பெமாண்டு தலைவர் இட்ரிஸ் ஜாலா, அவ்வாறு செய்யா விட்டால் கிரீஸ் நாட்டைப் போன்று இன்னும் 9 ஆண்டுகளில் மலேசியா திவாலாகி விடும் என வாதாடினார்.

13வது பொதுத் தேர்தலுக்கான ஆயத்த முயற்சிகளில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் கடந்த 9 மாதங்களாக உதவித் தொகைகளை மேலும் குறைப்பது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.