கிளந்தானில் மலாய் ஒதுக்கீட்டு நிலங்கள் ‘மேம்பாட்டு’ நோக்கத்துக்காக பூமிபுத்ரா அல்லாத நிறுவனங்களுக்கு 99 ஆண்டு கால குத்தகைக்கு விடப்படுவதற்கு மாநில ஆட்சி மன்றம் அங்கீகாரம் அளித்துள்ளதாக உத்துசான் மலேசியா இன்று முதல் பக்கச் செய்தியில் குற்றம் சாட்டியுள்ளது.
அந்தத் திட்டங்களில் Lembah Sireh, Bandar Baru Tunjong, Muzium Pasir Pekan, Kuala Krai land port, KB Mall, Tune Hotel, Ladang Rakyat ஆகியவையும் அடங்கும் என அது கூறியது.
அந்தத் திட்டங்களில் சம்பந்தப்பட்டுள்ள மொத்த நிலப் பரப்பு கணிசமானது என்றும் குறிப்பிட்ட உத்துசான், Lembah Sireh திட்டம் மட்டும் 400 ஹெக்டர் பரப்பளவு கொண்டது எனத் தெரிவித்தது. அதற்கு ஒரு மில்லியன் ரிங்கிட் பிரிமியம் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது.
கிளந்தானில் நிலத்தை வாங்குவதில் சிரமத்தை எதிர்நோக்குவதாக அந்த மாநிலத்திலும் வெளியிலும் உள்ள தகுதி பெற்ற மலாய்க்காரர்கள் புகார் செய்யும் வேளையில் மாநில அரசாங்கம் பூமிபுத்ரா அல்லாத நிறுவனங்களுக்குச் சாதகமாக நடந்து கொள்வதாகவும் உத்துசான் செய்தி குறிப்பிட்டது.
பூமிபுத்ரா நில உரிமையை பாதுகாப்பதற்கு கடுமையான நிபந்தனைகளை கிளந்தான் மாநில நிலச் சட்டம் கொண்டுள்ள போதிலும் அவ்வாறு நிகழ்ந்துள்ளதாக அது தெரிவித்தது.
மாநில ஆட்சி மன்றத்திடமிருந்து அங்கீகாரத்தைப் பெறுவதோடு அந்த பூமிபுத்ரா அல்லாத நிறுவனங்கள் மாநில அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுடன் தங்களைப் பிணைத்துக்
கொண்டு தங்கள் திட்டங்கள் சுமூகமாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதாகவும் தம்மை அடையாளம் கூற விரும்பாத மாவட்ட அதிகாரி ஒருவர் சொன்னதாகவும் உத்துசான் செய்தி குறிப்பிட்டுள்ளது.
அந்த பிணைப்பும் வியூக அடிப்படையில் அமைந்தவை அல்ல என்றும் தனக்குத் தெரிய வந்துள்ளதாகவும் அந்த ஏடு கூறியது. மாநில அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களின் பங்கு அந்தத் திட்டங்களை அமைக்கும் நிலைக்கு உதவுவதோடு முடிந்து விடுகிறது.
பூமிபுத்ரா அல்லாத நிறுவனங்களில் சிலவற்றின் அடைவு நிலைகள் நன்றாக இல்லாத போதும் நொடித்துப் போகும் நிலையை எதிர்நோக்கிய போதிலும் மலாய் ஒதுக்கீட்டு நிலத்தை மேம்படுத்துவதற்கு அவற்றை மாநில அரசாங்கம் நம்புவதாகத் தோன்றுகிறது என அந்த ஏடு வருத்தத்துடன் கூறியது.