ஆப்ரிக்காவின் மாரிடானியா நாட்டில் கைது செய்யப்பட்ட கடாபியின் உளவுத்துறைத் தலைவரை, நாடு கடத்தும் முன்பே அவரிடம் விசாரணை நடத்தி முடிக்க மாரிடானியா அரசு முடிவு செய்துள்ளது.
லிபியாவில், கடாபி தலைவராக இருந்த போது, அவரது மருமகனான அப்துல்லா அல் சனுஸ்ஸி, உளவுத் துறைத் தலைவராக இருந்தார். கடாபிக்கு எதிரான மக்கள் புரட்சியின் போது அவர் நாட்டை விட்டு தப்பியோடி விட்டார். அதோடு, 1980 மற்றும் 1990-களில், அரசுக்கு எதிராக திரண்ட மக்களைக் கொலை செய்தது, தலைநகர் டிரிபோலியில் உள்ள அபுசலீம் சிறையில், 1,200 கைதிகளைத் திட்டமிட்ட முறையில் கொலை செய்தது ஆகிய குற்றங்களுக்காக, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், மொராக்கோ நாட்டின் கசாபிளாங்கா நகரில் இருந்து போலி கடவுச் சீட்டின் மூலம், மவுரிடானியா நாட்டின் நவாக்சோட் வானூர்தி நிலையத்தில் வந்திறங்கிய போது, அந்நாட்டு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில் அவரை லிபியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என, அந்நாடு சட்டப்பூர்வமாக கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து மாரிடானியா அரசுடன் லிபியா பேசிவருகிறது. எனினும் லிபியாவில் நேர்மையான முறையில் விசாரணை நடக்குமா என அனைத்துலக அளவில் சந்தேகம் எழுந்துள்ளது.
பிரான்சில், 1989-ல் நடந்த ஒரு விமான விபத்தில், 179 பேர் பலியாயினர். இதில், சனுஸ்ஸியின் பங்கிருப்பதாக சந்தேகப்பட்ட பிரான்ஸ் அரசு அப்போதே அவரைக் கைது செய்யும்படி உத்தரவிட்டிருந்தது. இதனால் அவரை பிரான்சுக்கு நாடு கடத்தும்படி அந்நாட்டு குடியரசுத் தலைவர் நிக்கோலஸ் சர்கோசி மாரிடானிய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
எனினும் அவர் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு நாடுகடத்தப்படும் வாய்ப்புகளே அதிகம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், அவரிடம் முழுமையான விசாரணை நடத்தும் முடிவில் மாரிடானியா அரசு இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.