நாட்டில் மாற்றங்கள் கோரி கடந்த ஞாயிற்றுக் கிழமை பெட்டாலிங் ஜெயாவில் மகளிர் நடத்திய பேரணியை முக்கிய பாஹாசா மலேசியா, ஆங்கில மொழி நாளேடுகள் முற்றாகப் புறக்கணித்துள்ளன.
அந்தப் பேரணியில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கு ஏற்றனர்.
அந்தச் செய்தியை இருட்டடிப்புச் செய்த நாளேடுகளில் தி ஸ்டார், நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ், தி சன், பெரித்தா ஹரியான், உத்துசான் மலேசியா ஆகியவையும் அடங்கும். புதிதாக மீண்டும் தொடங்கப்பட்டுள்ள மலாய் மெயில் மட்டும் தகவல் வெளியிட்டது.
அதற்கு நேர்மாறாக சீன மொழி நாளேடுகள் பேரணி பற்றி விரிவாக செய்திகளை வெளியிட்டன. படங்களும் நிறைய இருந்தன.
பக்காத்தான் ராக்யாட் நிர்வாகம் செய்யும் சிலாங்கூர் அரசாங்கம் அந்தப் பேரணிக்கு ஆதரவு அளித்தது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.
பேரணியில் பங்கு கொள்ளுமாறு பிஎன் -னுக்கு அதிகாரத்துவ அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அந்தக் கூட்டணியிலிருந்து அதிகாரத்துவப் பிரதிநிதித்துவம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த முக்கியமான செய்தி ஏன் புறக்கணிக்கப்பட்டது என்பது மீது தமது ஊகத்தைத் தெரிவிக்க பேரணி ஏற்பட்டாளர்களின் பேச்சாளரான மரினா சின் மறுத்து விட்டார்.
அந்தக் கேள்வியை சம்பந்தப்பட்ட பத்திரிக்கைகளிடம் கேட்க வேண்டும் என்றார் அவர்.
“நான் ஏமாற்றமடைந்துள்ளேன். அவை ஏன் எங்களுக்கு இடமளிக்க வில்லை என்பது எனக்குத் தெரியாது. நாங்கள் பெண்களுக்கு வலிமையூட்ட விரும்புகிறோம்.”
“அந்த நாளேடுகளுக்குப் பேரணி பற்றித் தகவல் கொடுக்கப்பட்டது,” என அவர் தொடர்பு கொள்ளப்பட்ட போது கூறினார்.
சிலாங்கூர் ஆதரவு அளித்தது
இரண்டு இடங்களிலிருந்து சிலாங்கூர் அரசுக்குச் சொந்தமான பாடாங் ஆஸ்தக்காவில் பேரணி பங்கேற்பாளர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.
அந்தத் திடலில் அமைக்கப்பட்டிருந்த மேடையும் சிலாங்கூர் அரசாங்கம் ஆதரவு அளித்ததைத் தெளிவாகக் காட்டியது.
20 பக்காத்தான் தேர்வு செய்யப்பட்ட பேராளர்கள் உடனிருக்க சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் ரோட்ஸியா இஸ்மாயில் கூட்டத்தில் உரையாற்றினார்.
அந்தப் பேரணிக்கு ஆதரவு அளித்த பல அமைப்புக்களில் சிலாங்கூர் அரசும் ஒன்று என மரியா சின் கூறினார். அது எந்த நிபந்தனையுமின்றி 50,000 ரிங்கிட்டை வழங்கியது.
அது மக்கள் வரிப் பணம் என்பதால் அந்த நன்கொடையில் எந்தத் தவறும் இல்லை என அவர் சொன்னார். மற்ற ஆதரவாளர்கள் அரசியல் சார்பற்றவர்கள்.
“எங்கள் நிகழ்வு அரசியல் சார்பற்றது. நாங்கள் கட்சிச் சார்பற்றவர்கள். பேராளர்களை அனுப்புமாறு நாங்கள் எல்லா எல்லாக் கட்சிகளையும் கேட்டுக் கொண்டோம். அவர்கள் எந்தக் கூட்டணியைச் சார்ந்தவர்கள் என்பது பற்றி எங்களுக்குக் கவலை இல்லை.”
அந்த நிகழ்வுக்கு யார் நிதி அளித்தனர் என்பது பற்றிக் கவலைப்படாமல் பத்திரிக்கைகளும் பொது மக்களும் பேரணியில் எழுப்பப்பட்ட ஆறு கோரிக்கைகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என மரியா சின் வேண்டிக் கொண்டார்.
அவை வருமாறு: ஊழலற்ற அரசாங்கம், நியாயமான வாழ்க்கை சம்பளம், வாழ்க்கைத் தர மேம்பாடு, மகளிருக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவு, 2011ம் ஆண்டுக்கான அமைதியான கூட்ட மசோதாவை ரத்துச் செய்வது, நியாயமான சுதந்திரமான தேர்தலுக்கு வகை செய்வது.
அந்த நிகழ்வில் பேசிய ரோட்சியா, பிஎன் -னை ஆட்சியிலிருந்து விரட்டுமாறு கேட்டுக் கொண்டது பற்றிக் கருத்துரைத்த மரியா சின், தமது கருத்தைத் தெரிவிப்பதற்கு ரோட்ஸியாவுக்கு உரிமை இருப்பதாகச் சொன்னார்.
மகளிர் தலைவர்கள் எதிர்நோக்கும் சவால்களை ஒருமுகப்படுத்தும் பேச்சாளர் ஒருவரை வழங்குமாறு சிலாங்கூர் அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் அவர் சொன்னார்.