தொங்கு நாடாளுமன்றம் மலேசியாவுக்கு பேரிடரைக் கொண்டு வரும் என்கிறார் நஜிப்

ஆளும் கூட்டணி அடுத்த பொதுத் தேர்தலில் நல்ல பெரும்பான்மையைப் பெறத் தவறி அதன் விளைவாக தொங்கு நாடாளுமன்றம் உருவானால் நாட்டுக்கு பேரிடர் ஏற்படும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் எச்சரித்துள்ளார்.

“நிலைத்தன்மை கொண்ட நியாயமான வலிமையைக் கொண்ட அரசாங்கத்தைப் பெற்றிருப்பது மிக முக்கியமாகும். அது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வழியாகவும் இருக்கலாம் அல்லது சௌகரியமான சாதாரண பெரும்பான்மையாகவும் இருக்கலாம்.”

“ஆனால் நாங்கள் தொங்கு நாடாளுமன்றத்தை அல்லது மலேசியாவில் அரசியல் உறுதியற்ற சூழ்நிலையைக் கொண்டு வரும் எதனையும் விரும்பவில்லை. அது மிகவும் மோசமான சூழ்நிலையாகும்..”

“தேர்தலில் உறுதியான முடிவுகள் இல்லாவிட்டால் மலேசியாவுக்கு சிரமங்கள் ஏற்படும்,” என்றார் அவர்.

கோலாலம்பூரில் நேற்றிரவு அந்நியப் பத்திரிக்கையாளர்கள் மன்றத்தை தொடக்கி வைத்த பின்னர் நடத்தப்பட்ட கேள்வி பதில் நேரத்தின் போது நஜிப் உரையாற்றினார்.

தேர்தல் இலக்குகள் பற்றி சிங்கப்பூர் நிருபர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.

அந்த மன்றத்தை நிறுவிய ரோமென் போஸ் அந்த நிகழ்வுக்கு அனுசரணையாளராக இருந்தார்.

அதே கேள்விக்கு பதில் அளித்த போது நஜிப், பிஎன் -னின் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை மீண்டும் பெறுவது என்பது கடினமான இலக்கு என்பதை ஒப்புக் கொண்டார்.

“உண்மையில் மலேசியச் சூழலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறுவது மேலும் மேலும் சவாலாகி வருகிறது. சிங்கப்பூர் சூழலிலும் அது சவாலாகி வருகிறது.”

“என்றாலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற நாங்கள் முடிந்த அளவுக்கு முயற்சி செய்வோம்,” என்றார் பிரதமர்.

தாம் வாழ்நாளில் இவ்வளவு கடுமையாக ஒரு போதும் உழைத்தது இல்லை என அவர் பின்னர் புன்முறுவலுடன் கூறினார்.

“எனது நிகழ்ச்சிகள் எனக்கு கடுமையாக உள்ளன,” எனக் கூறிய அவர், கடந்த வார இறுதியில் சிலாங்கூருக்கும் பேராக்கிற்கும் தாம் மேற்கொண்ட அலுவல் பயணத்தைச் சுட்டிக் காட்டினார்.

அதிகம் கல்வி கற்ற சமூகம், சமூக கட்டமைப்புக்களின் உதயம், அதிகாரிகளுக்குக் கடந்த காலத்தில் இருந்த தகவல் ஏகபோகம் இப்போது இல்லாமை ஆகியவை நடப்புச் சவால்களுக்கு முக்கியமான காரணங்கள் என நஜிப் விளக்கினார்.

“நான் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை விரும்பவில்லை எனக் கூறினால் அது நான் உங்களிடம் பொய் சொல்வதற்கு ஒப்பாகும். என்றாலும் அதனைச் சாதிப்பது முன்னைக் காட்டிலும் மிக மிகச் சவாலாகி வருகிறது என்பதும் எனக்குத் தெரியும்.”

மலேசியாவுக்கு விரைவில் வரவிருக்கும் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் காமருனிடம் அதே கேள்வி எழுப்பப்பட்டால் தமக்கு சௌகரியமான சாதாரண பெரும்பான்மை போதும் எனச் சொல்லி விடுவார் என நஜிப் குறிப்பிட்டார்.

“இன்றைய ஜனநாயகங்களில் சௌகரியமான சாதாரண பெரும்பான்மை கிடைத்தாலே பெரும்பாலான பிரதமர்கள் சந்திரனை வெற்றி கொண்டதைப் போன்று மகிழ்ச்சியை அடைவர்,” என்றார் அவர்.