பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மறுபடியும் தொடுக்கப்படும் வழக்குக்காக இண்ட்ராப் ஏற்பாடு செய்துள்ள பிரிட்டிஷ் வழக்குரைஞர்கள் இருவர், மலேசியர்களின் உண்மைநிலையைக் கண்டறிய இங்குள்ள இந்தியர்களைச் சந்திப்பர்.
வழக்குரைஞர்கள் இம்ரான் கான், சுரேஷ் குரோவர் ஆகியோரின் வருகை, மலாயாவுக்கு இந்தியர்களைத் தொழிலாளர்களாகக் கொண்டுவந்த பிரிட்டிஷ் அரசாங்கம் பின்னர் அவர்களை நிர்க்கதியாக விட்டுச் சென்றதாகக் கூறி இண்ட்ராப் தொடரும் வழக்குக்கு ஆதாரங்கள் திரட்டும் நோக்கம் கொண்டதாகும்.
“வழக்குரைஞர்கள் ஓரங்கட்டப்பட்ட இந்தியர்களை நேரில் சந்தித்து அவர்கள் அடையாளக் கார்ட், கல்வி போன்றவற்றைப் பெறுவதில் எதிர்நோக்கும் பிரச்னைகள் பற்றித் தகவல்களைத் திரட்டுவார்கள்”, என்று மனித உரிமைக் கட்சி(எச்ஆர்பி) தகவல் பிரிவுத் தலைவர் எஸ்.ஜெயதாஸ் கூறினார்.
அந்தச் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை காலை மணி 9-க்கு கிள்ளான் ஹொக்கியான் மண்டபத்தில் நடைபெறும்.
அங்கு பெருங்கூட்டத்தை எதிர்பார்க்கும் ஜெயதாஸ், அது ஒரு கலந்துரையாடல் கூட்டம் மட்டுமே என்பதை வலியுறுத்தினார்.அதனால், போலீஸ் பிரச்னை எதுவும் வராது என்றும் நம்புகிறார்.
பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான வழக்கு 2007-இலேயே தொடரப்பட்டது.ஆனால் கோலாலம்பூரில் இண்ட்ராப் பேரணியை அடுத்து அதன் தலைவர்கள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதால் அது நின்றுபோனது.
“2007-இல் வழக்கைப் பதிவு செய்தோம்.வழக்கைத். தொடர மூன்று மாத அவகாசம் இருந்தது.ஆனால், முதலில் இண்ட்ராப் தலைவர்களின் விடுதலையில் கவனம் செலுத்த முடிவு செய்தோம்.அத்துடன் வழக்குக்கு ஆதரவாக மேலும் சில ஆவணங்களையும் தேட வேண்டியிருந்தது.
“இதுவரை(பிரிட்டனில்) 30,000 ஆவணங்களைத் தேடிக் கண்டுபிடித்திருக்கிறோம்.வழக்கை மீண்டும் தொடர்வதற்குமுன் நாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஒன்றுதான் இக்கூட்டம்”, என்றாரவர்.
முதல் வழக்கைப் பதிவு செய்த இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி இன்னமும் பிரிட்டனில் நாடுகடந்து வாழ்கிறார். அங்கிருந்தபடியே அவர் இவ்வழக்கை முன்னின்று நடத்துவார்.
ஆனால், அவரின் சகோதரரும் எச்ஆர்பி தலைவருமான பி.உதயக்குமார், ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில் கலந்துகொள்வார் என்று நம்பப்படுகிறது.