தாஜுடின் டானாஹர்த்தாவுக்குக் கொடுக்க வேண்டிய 589 மில்லியன் ரிங்கிட் கடன் வராத கணக்கில் வைக்கப்பட்டது

“தாஜுடின் ராம்லிக்கும் அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் கடந்த மாதம் நீதிமன்றத்துக்கு வெளியில் செய்து கொள்ளப்பட்ட தீர்வு ஒப்பந்தத்தின் கீழ் தாஜுடின் டானாஹர்த்தாவுக்குக் கொடுக்க வேண்டிய 589 மில்லியன் ரிங்கிட் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை.”

முறையீட்டு நீதிமன்றம் பதிவு செய்த அந்த ரகசியத் தீர்வில் முன்னாள் எம்ஏஎஸ் தலைவருமான தாஜுடின் தமது கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை என்பதும் அடங்கியுள்ளதாக பிப்ரவரி மாதம் 15ம் தேதி பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கூறிக் கொண்ட பின்னர் அது தொடர்பாக தகவல் அறிந்தவர்களுடன் மலேசியாகினி தொடர்பு கொண்ட போது அது உண்மையென உறுதி செய்யப்பட்டது.

“அந்தத் தீர்வின் ஒரு பகுதியாக அந்தக் கடன் வராத கணக்கில் சேர்க்கப்பட்டு விட்டது என்பதை நான் என் வட்டாரங்களிலிருந்து கிடைத்த தகவல் மூலம் உறுதி செய்ய முடியும். அந்தத் தீர்வின் விளைவாக உடனடியாக 589 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது,” எனப் புவா கடந்த மாதம் மலேசியாகினியிடம் கூறினார்.

கோலாலம்பூர் உயர் நீதிமன்ற முடிவை எதிர்த்து முறையீட்டு நீதிமன்றத்தில் தாம் செய்து கொண்ட முறையீட்டை தாஜுடின் 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ம் தேதி மீட்டுக் கொண்டார்.

அந்த வழக்கு தாஜுடினுக்கும் Telekom Malaysia Bhd, Naluri Corporation, Celcom (M) Bhd, Atlan Holding Bhd, CIMB Group ஆகியவை உட்பட அரசுடன் தொடர்புடைய பல நிறுவனங்களுக்கும் இடையிலானதாகும்.

1994ம் ஆண்டு எம்ஏஎஸ் பங்குகளை தாஜுடின் கொள்முதல் செய்த விவகாரத்தில் தாம் கொடுக்க வேண்டிய அந்தத் தொகையைத் திருப்பிக் கொடுக்குமாறு உயர் நீதிமன்றம் அவருக்கு ஆனையிட்டது.

அதே வேளையில் அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் மீது 13 பில்லியன் ரிங்கி தாஜுடின் போட்ட  எதிர் வழக்கையும் நீதிமன்றம் நிராகரித்தது.

இன்னும் எஞ்சியிருக்கும் டானாஹர்த்தா சொத்துக்களை நிர்வாகம் செய்து வரும் Prokhas Sdn Bhd (நிதி அமைச்சுக்கு முழுமையாகச் சொந்தமானது) நீதி மன்றத்துக்கு வெளியில் செய்து கொள்ளப்பட்ட தீர்வு விவரங்களை வெளியிடவில்லை.

1997-98 நிதி நெருக்கடியின் போது தங்கள் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தடுமாறிய போது வங்கி முறை நொடித்து போவதைத் தடுப்பதற்காக டானாஹர்த்தா அமைக்கப்பட்டது.

தாஜுடினின் 589 மில்லியன் ரிங்கிட் கடன் வராத கணக்கில் எழுதப்பட்டு விட்டது என புவா கூறியது சரி என அந்த வட்டாரங்கள் மலேசியாகினியிடம் உறுதி செய்தன.

“புவா அறிக்கையை மறுக்க முடியாது. அந்தக் கடன் வராத கணக்கில் எழுதப்பட்டு விட்டதை நான் உறுதி செய்ய இயலும்,” என அடையாளம் கூற விரும்பாத அந்த வட்டாரங்களில் ஒன்று குறிப்பிட்டது.

“அந்தத் தீர்வின் ஒரு பகுதியாக அரசாங்கம் ஒரு தொகையைக் கொடுக்கிறது என்றும் நம்பப்படுகிறது,” என்றும் அந்த வட்டாரம் கூறியது.

‘கடனைத் திருப்பிக் கொடுக்க தாஜுடினிடம் வசதி உள்ளது’

திருப்பிக் கொடுக்குமாறு நீதிமன்றம் தாஜுடினுக்கு உத்தரவிட்ட பணத்தைக் கொடுப்பதற்கான வசதி அவரிடம் இருப்பதாக அந்த வழக்கை நன்கு அறிந்தவர்கள் தெரிவித்தனர்.

சிலாங்கூர் சுங்கை பூலோவுக்கு அருகில் பெரிய நிலப் பரப்பு ஒன்றில் குதிரைப் பண்ணை அவருக்குச் சொந்தமாக உள்ளது. லங்காவியில் நான்கு நட்சத்திர ஹோட்டல் ஒன்றையும் அவர் நடத்துகிறார்.

நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்வு காணப்பட்டுள்ள போதிலும் ஆறு ஆண்டுகளுக்கு மேல் நீடித்த அந்த விவகாரத்தில் செலுத்த வேண்டிய வழக்குரைஞர் கட்டணம் உட்பட பல செலவுகள் மில்லியன் கணக்கான ரிங்கிட்டாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

1994ம் ஆண்டு எம் ஏ எஸ்-ஸில் 32 விழுக்காடு பங்குகளை தாஜுடின் கொள்முதல் செய்வதற்காக பெறப்பட்ட 1.79 பில்லியன் ரிங்கிட்டை திருப்பிக் கொடுக்கத் தவறி விட்டதாக அவர் மீது அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் வழக்குப் போட்டன.

அரசாங்கம் 2000-2001ம் ஆண்டு கால கட்டத்தில் தாஜுடினுடைய பங்குகளை பங்கு ஒன்றுக்கு 8 ரிங்கிட்டுக்கு திரும்ப வாங்கிக் கொண்டது. சந்தை விலையைக் காட்டிலும் இரண்டு மடங்கு கூடுதலான அந்த விலை பெரும் சர்ச்சையை உருவாக்கியது.