லினாஸ் பாதுகாப்பானது என்பதை நிரூபிப்பது அரசின் கடமை என்கின்றனர் போராளிகள்

லினாஸ் அரிய மண் தொழில் கூடம் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதற்கு அறிவியல் ஆதாரங்களை காட்டுமாறு அதனை எதிர்க்கின்றவர்களைக் கேட்டுக் கொள்வதற்குப் பதில் அது  பாதுகாப்பானது என்பதை மெய்பிப்பது அரசாங்கத்தின் கடமையாகும். இவ்வாறு லினாஸ் எதிர்ப்பு இயக்கம் கூறுகிறது. 

“அது பாதுகாப்பானது என நிரூபிப்பது அரசின் பொறுப்பாகும். அது பாதுகாப்பற்றது என நிரூபிப்பது மக்கள் வேலை அல்ல,” என மலேசியாவைக் காப்பாற்றுங்கள் லினாஸை நிறுத்துங்கள் என்ற SMSL அமைப்பின் தலைவர் தான் பூன் டீட் கோலாலம்பூரில் நேற்று நிருபர்கள் சந்திப்பில் குறிப்பிட்டார்.

அந்த அரிய மண் தொழில் கூடம் தீங்கானது என அறிவியல் ஆதாரங்கள் காட்டுமானால் அது இயங்குவதற்கு அரசாங்கம் அனுமதிக்காது என நேற்று 988 என்ற மண்டரின் வானொலி நிலையத்துக்கு அளித்த பேட்டியில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியதற்கு அவர் பதில் அளித்தார்.

அணு எரிபொருள் அனுமதி வாரியம் உட்பட பல அரசு அமைப்புக்களுக்கு SMSL அறிவியல் ஆதாரங்களைச் சமர்பித்துள்ளது என தான் சொன்னார்.

அந்த அரிய மண் தொழில் கூடம் மக்களுடைய ஆரோக்கியத்துக்கும் சுற்றுச் சூழலுக்கு மருட்டல் என்பதை அந்த ஆதாரங்கள் காட்டியுள்ளதாக அவர் சொன்னார்.

“ஆனால் இது வரை அணு எரிபொருள் அனுமதி வாரியம் எந்தப் பதிலையும் சொல்லவில்லை.”

அந்த ஆதாரங்கள் வலிமை வாய்ந்த தேசிய பொருளாதார மன்றத்தில் உறுப்பியம் பெற்றுள்ள மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்-கிற்கும் அனுப்பப்பட்டுள்ளன.”

கடந்த ஆண்டு நாங்கள் குவாந்தானில் அவரைச் சந்தித்த போது நாங்கள் எங்கள் முடிவுகளை அறிவியல் கண்டு பிடிப்புக்களின் அடிப்படையில் எடுக்க வேண்டும் என அவர் சொன்னதாக தான் தெரிவித்தார்.

ஆனால் இது வரையில் அவரும் மறுமொழி கூறவில்லை என்றார் அவர்.

பிஎஸ்சி விசாரணையில் SMSL கலந்து கொள்ளும்

பிஎஸ்சி என்னும் நாடாளுமன்றத் தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது பற்றிக் குறிப்பிட்ட தான், இன்னொரு லினாஸ் எதிர்ப்பு இயக்கமான Himpunan Hijauவும் எதிர்க்கட்சிகளும் அதனைப் புறக்கணித்த போதிலும் SMSL அதன் விசாரணையில் பங்கு கொள்ளும் என்றார்.

“நாங்கள் கடந்த கால நிகழ்வுகள் குறித்து ஏமாற்றம் அடைந்திருந்தாலும் மக்கள் குரலை எழுப்பும் சிவில் சமூக அமைப்பு என்ற முறையில் நாங்கள் நிச்சயம் பிஎஸ்சி விசாரணையில் கலந்து கொள்வோம்..”

பிரதமர் அந்த விஷயத்தில் உண்மையாக நடந்து கொள்வார் என்றும் அரசாங்கம் மக்களுக்கு செவி சாய்க்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“அந்த அரிய மண் தொழில் கூடம் முழுக்க முழுக்கப் பாதுகாப்பானது என்றால் நாங்கள் அதனை ஏற்றுக் கொள்வோம்,” என அவர் மேலும் சொன்னார்.