EO6 “தவறாகக் கைதுசெய்யப்பட்டனர்”என பிஎஸ்எம் 82 பேர்மீது வழக்கு

பார்டி சோசலிஸ் மலேசியா(பிஎஸ்எம்),தம் கட்சியைச் சேர்ந்த அறுவர் கடந்த ஆண்டு அவசரகாலச் சட்ட(இஓ)த்தின்கீழ் தப்பாகக் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டார்கள் என்று 82பேர்மீது சிவில் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளது. எதிர்வாதிகளாக குறிப்பிடப்பட்டிருக்கும் 82 பேரில் பெரும்பாலோர் போலீஸ் அதிகாரிகளாவர்.

பிஎஸ்எம் வழக்குரைஞர் யுதிஷ்ட்ரா தர்மதுரை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்த வழக்கில் உள்துறை அமைச்சர், இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ்(ஐஜிபி),துணை ஐஜிபி, சட்டத்துறைத் தலைவர், மலேசிய அரசாங்கம் ஆகியோர் எதிர்வாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமானவர்களாவர்.

அவ்வறுவரும், வன் தாக்குதலால் காயமடைந்தததாவும் தீய நோக்குடன் தங்கள்மீது வழக்கு தொடுக்கப்பட்டதாகவும், கைது செய்யப்பட்டதற்கு நியாயமான காரணங்கள் குறிப்பிடப்படவில்லை என்றும் சட்டம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாகவும்,அதிகார அத்துமீறல்கள் நடந்திருப்பதாகவும் கூறி அவற்றுக்காக இழப்பீடும் கோரியுள்ளனர்.

ஜூலை 9 பெர்சே 2.0 பேரணிக்கு முன்னதாக சிவில் உரிமைக்காக போராடும் அமைப்புகளை ஒடுக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டபோது இந்த பிஎஸ்எம் தலைவர்கள் அறுவரும் இஓ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, கைதுக்கான காரணம் சொல்லப்படாமலேயே 28 நாள்களுக்குக் காவலில் வைக்கப்பட்டனர்.

சுங்கை சிப்புட் எம்பி டாக்டர் ஜெயக்குமார் தேவராஜ், சூ சொன் காய், சரத்பாபு, எம்.சரஸ்வதி, எம்.சுகுமாரன், ஏ.லட்சுமணன் ஆகியோரே அந்த அறுவருமாவர்.

தங்கள் அரசமைப்பு உரிமைகள் மீறப்பட்டது போக வேறுவகை இழப்புகளையும் தாங்கள் எதிர்நோக்கியதாக அந்த அறுவரும் குறிப்பிட்டுள்ளனர்.

-கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டதால் வழக்கமான வாழ்க்கைத் தரத்தை இழந்தது;
-தனிப்பட்ட சுதந்திரத்தை இழந்தது;
-சமத்துவத்தை இழந்தது, சட்டத்தின் பாதுகாப்பை இழந்தது;
-நடமாட்ட உரிமையை இழந்தது;
-பேச்சுரிமையை இழந்தது;
-கூட்டங்கள் கூடும் உரிமையை இழந்தது;
-கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தபோதும் போலீஸ் விசாரணையின்போது ஏற்பட்ட அச்ச உணர்வுக்காகவும்;
-பெயர்  கெட்டுபோனதற்காகவும்;
-சரஸ்வதியின் உடல்நலன் கெட்டுப்போனதற்காகவும்;
-சரஸ்வதி, லெட்சுமணன் ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளானதால் காயமடைந்ததற்காவும்
அவர்கள் இழப்பீடுகள் கோருகிறார்கள்.

 “இதற்கெல்லாம் ஐஜிபியும் துணை ஐஜிபியும்தான் பொறுப்போற்க வேண்டும்” என்று பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ்.அருள்செல்வன் செய்தியாளர்களிடம் கூறினார்.அவருடன் 30பிஎஸ்எம் ஆதரவாளர்களும் ஆதரவு தெரிவிப்பதற்கு நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்தனர்.

“போலீஸ் தொழில்நெறிமுறைக்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.இப்போது நாங்கள் இதைச் செய்யாவிட்டால் எதிர்காலத்திலும் திரும்பத் திரும்ப செய்துகொண்டே இருப்பார்கள்”, என்று ஜெயக்குமார் கூறினார்.

“உத்தரவுப்படி நடப்போரைத் தண்டிப்பது எங்கள் நோக்கமல்ல.நாங்கள் கைது செய்யப்பட்டபோது எங்களிடம் பல போலீஸ்  அதிகாரிகள் பரிவுடன் நடந்துகொண்டதையும் இங்குக் குறிப்பிடத்தான் வேண்டும்”, என்றாரவர். 

தடுப்புக்காவலிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் இந்த அறுவரும்  மேலும் 24 கட்சி ஆதரவாளர்களுடன் சேர்த்து, கடந்த ஆண்டு ஜூன் 25-இல், அவர்களின்  ‘Udah Bersaralah’  நிகழ்வின்போது கீழறுப்பு ஆவணங்களை வைத்திருந்தனர் என்று குற்றம் சாட்டப்பட்டனர்.

30 பேரும் பேரரசருக்கு எதிராக போரிடத் திட்டமிடுகிறார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டனர்.பின்னர், அக்குற்றச்சாட்டு பொது ஒழுங்குக்கு மிரட்டலாக இருந்தனர் என்று திருத்தப்பட்டது.

ஆனால், செப்டம்பர் 19-இல், அரசாங்கம் இஓ-வையும் விசாரணை-இன்றி-காவலில் வைக்கும் ஏனைய சட்டங்களையும் ரத்துச் செய்யப்போவதாக அறிவித்ததை அடுத்து 30பேருக்கும் எதிரான வழக்கு கைவிடப்பட்டது.