ஒரே பராமரிப்பு (1Care) சுகாதார முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட பின்னரே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அந்த முறை மீது சுகாதார அமைச்சு பொது மக்களுடன் ஆலோசனை நடத்த முன் வந்துள்ளதாக பிகேஆர் சாடியுள்ளது.
“மக்களிடமிருந்து பெரும் எதிர்ப்பை பெற்ற பின்னரே பொது மக்களுக்கு அந்த முறையை விளக்குவது பற்றியும் அவர்களுடன் ஆலோசனை நடத்துவது பற்றியும் சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய் பேசுவது வியப்பைத் தருகிறது.”
SBPA போன்ற மற்ற பிஎன் அறிவிப்புக்களுக்கு எதிர்ப்புக் காட்டப்பட்ட பின்னரே ஆலோசனை நடத்தப்படுகிறது.”
“ஒரே பராமரிப்பு மீது உண்மையான கலந்துரையாடல்கள் நிகழவில்லை என முந்திய ஆலோசனைக் கூட்டங்களில் பங்கு கொண்ட மருத்துவர்கள் கூறியுள்ளனர்.”
“என்றாலும் அரசாங்கம் அந்த திட்டத்தைத் தொடருவதற்குத் தயாராக இருக்கிறது,” என பிகேஆர் தலைவி டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயில் வெளியிட்ட அறிக்கை கூறியது.
சர்ச்சைக்குரிய அந்தத் திட்டத்துக்கான நகல் வடிவம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் மட்டுமே சாத்தியமாகும் என்றும் அது குறித்து பொது மக்களுக்கு விளக்கப்பட்டு ஆலோசனை பெறப்படும் என்றும் லியாவ் கூறியுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.
சுகாதார அமைச்சு உடனடியான பிரச்னைகளை முதலில் சமாளிக்காமல் ஒரே பராமரிப்பு முறையை அறிமுகம் செய்வதால் நாட்டின் சுகாதாரக் கவனிப்புப் பிரச்னைகளை தீர்க்க முடியாது என்றும் வான் அஜிஸா சொன்னார்.
“நான் ஏற்கனவே கூறியுள்ளது போல, 2008ம் ஆண்டு நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.2 விழுக்காடே சுகாதாரத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அளவு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள 5 முதல் 6 விழுக்காடு விகிதத்தை விட குறைவாகும்.”
“சுகாதாரத்துக்கான அரசாங்கச் செலவுகளில் 20 முதல் 40 விழுக்காடு ஊழல் உட்பட திறமையற்ற நடவடிக்கைகளினால் விரயமாவதாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.”
“ஆகவே அத்தகையை குறைபாடுகளை சரி செய்யாமல் ஒரே பராமரிப்பு முறையை அறிமுகம் செய்வது ஊழல் பெருகுவதற்கான வாய்ப்புக்களையே அதிகரிக்கும். அந்த நிலை நாட்டின் சுகாதாரக் கவனிப்பு முறைக்கு உண்மையிலேயே துயரமான காலமாக இருக்கும்.”
“கடந்த இருபது ஆண்டுகளில் நாட்டின் சுகாதார கவனிப்பு முறையின் பல்வேறு துறைகளை தனியார் மயமாக்கப்பட்ட போது அவை திறமையை உயர்த்துவதற்குப் பதில் கசிவுகளையே அதிகரித்துள்ளன,” என்று வான் அஜிஸா சொன்னார்.