சீன கல்விமான்கள் எழுப்பியுள்ள பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பழைய பிரச்னைகளைத் தமது நிருவாகம் தீர்த்து வைக்கும் கடப்பாட்டைக் கொண்டுள்ளது என்று நேற்று பிரதமர் நஜிப் உறுதி அளித்திருந்த போதிலும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திட்டமிட்டபடி கண்டனப் பேரணி நடைபெறும்.
டோங் ஜோங் (Dong Zong) என்று அழைக்கப்படும் ஐக்கிய சீனப்பள்ளி குழுக்கள் மன்றம் ஏற்பாடு செய்துள்ள “325 கண்டனக் கூட்டம்” எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிஎன்னுக்கு எதிரானப் பெரும் அரசியல் அலையை உருவாக்கும் என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
சிலாங்கூர், காஜாங்கில் நியு இரா கல்லூரியில் (New Era College) ஞாயிற்றுக்கிழமை காலை மணி 11.00 க்கு தொடங்கவிருக்கும் இப்பேரணியில் நாடு முழுவதிலுமிருந்து 3,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் 250 சீன அமைப்புகளும், கல்வி குழுக்களும், இதர இன மக்களோடு எதிர்க்கட்சிகளும் அடங்கும்.
டோங் ஜோங்கிற்கு சொந்தமான நியு இரா கல்லூரியில் நடைபெறும் அந்நிகழ்வின் நோக்கம் சீன சமூகத்தை ஒன்றிணைத்து சீன தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான சீன மொழியில் பயிற்சி பெறாத ஆசிரியர்களை அப்பள்ளிகளிலிருந்து மாற்றக்கோரி அரசாங்கத்திற்கு அழுத்தம் அளித்தலாகும்.
மேலும், சீனப்பள்ளிகளுக்கு எதிராகப் பின்பற்றப்படும் வேறுபாடுகளை, குறிப்பாக கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகளைப் பீணித்திருக்கும் ஆசிரியர் பற்றாக்குறையை, வெளிச்சத்திற்கு கொண்டு வருவதும் இப்பேரணியின் நோக்கமாகும்.
பேரணிக்கு எல்லாம்,100 மீட்டர் நீளமுள்ள பதாகை உட்பட, தயாராக இருப்பதாக சீன மொழி நாளேடு சின் சியு டெய்லி கூறுகிறது.
சீனர் அல்லாதவர்களும் பங்கேற்கின்றனர்
அதே நாளன்று, காலை மணி 10.00க்கு பிரதமர் நஜிப்பு போலீஸ் நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக காஜாங் வருகிறார். போக்குவரத்து நெரிசல் இருக்கும். ஆகவே, பேரணியில் பங்கேற்பவர்களை காலை மணி 8.00 க்கு முன்பாகவே வந்துவிடுமாறு டோங் ஜோங் தலைவர் டாக்டர் யாப் சின் தியான் கேட்டுக்கொண்டார்.
தமிழ் அறவாரியம், இடபுள்யுஆர்எப், மக்கள் சமயப்பள்ளிகள் மன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் சீன கல்விக்கு தங்களுடைய ஆதரவைத் தெரிவிப்பதற்காக இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று யாப் கூறினார்.
அந்த பேரணிக்கு ஆதரவு தெரிவிக்க தமது கட்சி ஆதரவாளர்களைத் திரட்டப்போவதாக டிஎபியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கடந்த வாரம் அறிவித்திருந்தார். பிகேஆரின் உதவித் தலைவர்களான தியான் சுவா, நுருல் இஸ்ஸா அன்வார் மற்றும் பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுடியன் ஆகியோரும் இப்பேரணியில் பங்கேற்பர் என்று தியன் சுவா இன்று கூறினார்.
சீனப்பள்ளிகள் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்னைகளை கல்வி அமைச்சு தீர்க்கத் தவறியதைத் தொடர்ந்து இப்பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க பிரச்னை பெருமளவிலான சீனக் கல்வியில் தகுதி பெறாத ஆசிரியர்கள் இருப்பதாகும்.
சீன தொடக்கப்பள்ளிகளின் மேம்பாட்டை பலவீனப்படுத்துவதுதான் அக்கொள்கையின் இலக்கு என்று சீன கல்விமான்கள் எப்போதும் கருதி வந்துள்ளனர்.