நஜிப்: ஏஜி மீது பஞ்சாயத்து மன்றம் இல்லை

இரகசியக் கும்பல் தலைவன் ஒருவனை புலனாய்வு செய்த போலீஸ் வர்த்தக் குற்றப் புலானாய்வுத் துறையின் முன்னாள் தலைவர் ராம்லி யூசோப் மீது ஏஜி என்ற சட்டத் துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்ல் வெண்டுமென்றே பழி சுமத்தியதாக கூறப்படுவது தொடர்பில் அவரை விசாரிக்க பஞ்சாயத்து மன்றம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நிராகரித்துள்ளார்.

அந்தக் கோரிக்கைகளுக்கு முடியாது எனப் பதில் அளித்த நஜிப், அது வெறும் குற்றச்சாட்டுத் தான் என்றார். போதுமான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே பஞ்சாயத்து மன்றத்தை அமைக்க முடியும் என்றார் அவர்.

“அந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்க வேண்டும்,” என அவர் நேற்றிரவு அம்னோ உச்ச மன்றக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய பின்னர் கூறினார்.

2007ம் ஆண்டு அப்போதைய உள்நாட்டுப் பாதுகாப்பு துணை அமைச்சர் ஜொஹாரி பாஹாரும் மூசாவை ஒதுக்கி விட்டு ஜோகூரைத் தளமாகக் கொண்ட குண்டர் லும்பல் தலைவன் கோ செங் போ-வை விசாரிக்குமாறு உத்தரவிட்டதாக மலேசியாகினி செய்தி வெளியிட்டது.

அப்போதைய தேசியப் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான், கோ-வுடன் ஒத்துழைத்ததுடன் கோ சம்பந்தப்பட்ட சூதாட்ட நடவடிக்கைகளையும் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் நடவடிக்கைகளையும் மூடி மறைப்பதற்கு உதவியது விசாரணைகள் மூலம் தெரிய வந்ததாக ராம்லி கூறிக் கொண்டார்.

அந்த வழக்கு தொடர்பான மிகவும் ரகசியமான கோப்புக்களைக் கைப்பற்றுமாறு ஊழல் தடுப்பு நிறுவனத்துக்கு (இப்போது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்) கனி உத்தரவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அந்தத் தகவல்களைப் பெற்றதும் கோ வழக்கில் தகவல் கொடுத்தவர்களைக் கண்டு பிடித்து அந்த வழக்கை புலனாய்வு செய்யும் வர்த்தக குற்றப் புலனாய்வுத் துறை குழு மீது குற்றம் சாட்டும் வகையில் அவர்களுடைய வாக்குமூலங்களை மாற்றுமாறு கட்டாயப்படுத்தும்படியும் தமது அதிகாரிகளுக்கு கனி ஆணையிட்டதாகவும் கூறப்பட்டது.

அந்த விவரங்கள் வெளியானதும் பல ஒய்வு பெற்ற, இன்னும் சேவையில் இருக்கின்ற பல போலீஸ் அதிகாரிகள், கனியையும் மூசாவையும் விசாரிப்பதற்கு பஞ்சாயத்து மன்றம் அமைக்கப்பட்டால் சாட்சியமளிக்க முன் வந்தனர்.

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமின் கருமைக் கண் விவகாரத்திலும் முன்னாள் எம் ஏ எஸ் தலைவர் தாஜுடின் ராம்லி விஷயத்திலும் தம்மிடம் கூடுதல் ஆதாரம் இருப்பதாகவும் அவற்றை வழங்கத் தயாராக இருப்பதாகவும் ராம்லி கூறினார்.

அந்த விஷயத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வகை செய்யும் பொருட்டு அவசரத் தீர்மானம் ஒன்றை சுபாங் எம்பி ஆர் சிவராசா கடந்த புதன் கிழமை கொண்டு வந்தார். ஆனால் அதனை அவை சபாநாயகர் நிராகரித்து விட்டார்.