செராமாக்களில் தொல்லை கொடுப்போர்மீது போலீஸ் நடவடிக்கை

அரசியல் கூட்டங்களில் தொல்லை கொடுப்போர்மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என்று கூறும் தேசிய போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார், 13வது பொதுத் தேர்தல் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுவது உறுதி செய்யப்படும் என்கிறார்.

“சட்டப்படி நடந்துகொள்வோம். சிறிய கும்பலோ, பெரிய குழுவோ, தனிப்பட்டவர்களோ சட்டத்தை மீறுவோர்மீது நடவடிக்கை எடுப்போம்”, என்று புக்கிட் அமானில் செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் கூறினார்.

தேர்தல் நெருங்க, நெருங்க இப்படிப்பட்ட தொல்லைகள் பெருகிவருவது பற்றிக் குறிப்பிட்டபோது அவை பற்றி புகார் செய்தால்  போலீஸ் விசாரிக்கும் என்று இஸ்மாயில்  உறுதி செய்தார்.

மாற்றரசுக் கட்சிகளும் என்ஜிஓ-களும் நடத்திய பல  கூட்டங்களில் காலாடிக்கும்பல்கள் புகுந்து கலாட்டா செய்திருக்கிறார்கள்.அவர்களில் பலர் பிஎன் மற்றும் அம்னோ ஆள்கள் என்றும் அடையாளம் கூறப்பட்டுள்ளது.

ஆனால், அவர்கள்மீது போலீஸ் நடவடிக்கை மிக மெதுவாக மேற்கொள்ளப்படுவதாகவும் சில வேளைகளில் நடவடிக்கையே எடுக்கப்படுவதில்லை என்றும் மாற்றரசுக் கட்சியும் என்ஜிஓ-க்களும் குறைகூறியுள்ளன.

போலீசார் அந்தக் காலிகளின் கூட்டத்துக்கு உடந்தையாக இருக்கிறார்கள் என்றுகூட குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

வாக்களிப்பு பாதுகாப்பாக நடைபெறுவது உறுதிப்படுத்தப்படும்

பொதுத் தேர்தலை எதிர்கொள்ள போலீஸ் ஆயத்தமாக உள்ளதா என்று வினவியதற்கு எப்போதுமே தயார்நிலையில் இருப்பதாக இஸ்மாயில் பதிலிறுத்தார்.

“தேர்தல் நெருங்க நெருங்க எங்களின் தயார்நிலையும் கூடிக்கொண்டே வருகிறது.

“தேர்தல் பாதுகாப்பு அதில் போலீசாரின் பங்கு பற்றியெல்லாம் தேர்தல் ஆணையத்துடன் கலந்து பேசியுள்ளோம்.முந்தைய ஆண்டுகளில் நடந்த இடைத் தேர்தல்கள் பலவற்றையும் ஆராய்ந்து பார்த்தோம்.

“அந்த வகையில் எங்கள் கடமையச் செய்யவும் தேர்தல் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுவதை உறுதிப்படுத்தவும் ஆயத்தமாக இருக்கிறோம்” , என்றார்வர்.