‘போலீஸ் ஊழல்’ ( Copgate ) தொடர்பில் ஏஜி இடை நீக்கம் செய்யப்பட வேண்டும்

‘போலீஸ் ஊழல்’ ( Copgate ) என்று அழைக்கப்படும் விவகாரத்தில் ஏஜி என்ற சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்ல் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் விஷயங்கள் வெளியிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவரை இடை நீக்கம் செய்யுமாறு எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் அரசாங்கத்தை நெருக்கத் தொடங்கியுள்ளனர்.

உண்மையில் அப்துல் கனி, முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான், ஊழல் தடுப்பு நிறுவனம் (இப்போதைய மலேசிய ஊழல் தடுப்பு நிறுவனம்) ஆகியவற்றுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன என்று பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் கூறினார்.

முன்னாள் போலீஸ் தலைவர் ரகசிய கும்பல் தலைவன் ஒருவனுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்பட்டதால் அந்தக் குற்றச்சாட்டுக்கள் கடுமையானவை என்றார் அவர்.

“அத்துடன் அந்தக் குற்றச்சாட்டை சுமத்துவது சாதாரண மனிதர் அல்ல. போலீஸ் படையில் பணியாற்றிய மிகவும் முதுநிலை போலீஸ் அதிகாரியான (முன்னாள் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர்) ராம்லி யூசோப் ஆவார்.”

“இது தவிர ஏஜி-க்கு எதிராக இன்னும் பல குற்றச்சாட்டுக்களும் உள்ளன. அவை மீது அரசாங்கம் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,” என சுரேந்திரன் வினவினார்.

கடந்த புதன் கிழமை அந்த விவகாரம் விவாதிக்கப்படுவதற்கு சுபாங் எம்பி ஆர் சிவராசா கொண்டு வந்த அவசரத் தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் நிராகரித்திருக்கக் கூடாது என்றும் அவர் சொன்னார்.

“இன்னும் பணி புரியும் நாட்டின் மிகவும் மூத்த சட்டத் துறை அதிகாரி ஒருவர் அந்தப் பிரச்னையில் சம்பந்தப்பட்டுள்ளார்.”

“அந்த விவகாரம் விவாதிக்கப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். குறைந்த பட்சம் விசாரணை நிகழும் வரை அப்துல் கனி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும்,” என சுரேந்திரன் வலியுறுத்தினார்.

பஞ்சாயத்தை மன்றத்தை அமைக்க ‘போதுமான ஆதாரங்கள்’ உள்ளன

கனி, மூசா ஆகியோருக்கு எதிராகப் பஞ்சாயத்து மன்றத்தை அமைப்பதற்கு ஏற்கனவே போதுமான ஆதாரங்கள் இருப்பதாக பாஸ் சட்ட ஆலோசகர் அஸ்முனி அவி கூறியிருக்கிறார்.

அந்தக் குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லை என்றால் போலீசும் ஏஜியும் அவதூறுக்காக இன்னேரம் சிவில் நடவடிக்கை எடுத்திருப்பார்கள் என அவர் சொன்னார்.

ராம்லி சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் கடுமையானவை என சுரேந்திரனைப் போன்று அவரும் கருதுகிறார்.

போலீஸ் படை, சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் ஆகியவற்றின் தோற்றத்தை மீண்டும் நிலை நிறுத்துவது முக்கியமாகும். பொது மக்கள் நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கு பஞ்சாயத்து மன்றம் அல்லது அரச விசாரணை ஆணையத்தை அமைப்பது பேருதவியாக இருக்கும்.”

ஏஜி அரசமைப்பின் படி சட்டத்தின் பாதுகாவலர் என்பதால் அந்தக் குற்றச்சாட்டுக்கள் ஏஜி-யின் நிலையை பாதித்துள்ளதாக முன்னாள் மாஜிஸ்திரேட்டான அஸ்முனி சொன்னார்.
 
“ரகசியக் கும்பலுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறும் குற்றச்சாட்டுக்களினால் அவருடைய தோற்றத்துக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது. நாம் அதனை சாதாரணமாக ஒதுக்கி விட முடியாது.”

“அந்த விவகாரத்தை முழுமையாக ஆய்வு செய்வதற்கும் அந்த அமைப்பு மீது மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தவும் செய்யப்படும் முயற்சியாக பஞ்சாயத்து மன்றம் கருதப்பட வேண்டும்,” என்றார் அஸ்முனி.