பினாங்கு அரசு, மக்கள் நலனைவிட முதலீட்டாளர்களின் நலன்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறது என்றும் பொதுமக்களுடனும் என்ஜிஓ-க்களுடனும் போதுமான அளவுக்குக் ஆலோசனை கலப்பதில்லை என்றும் குறைகூறப்பட்டுள்ளது.
நிலையான மேம்பாட்டுப் பணிகள் தொடர்பில் அரசு நிர்வாகம், தனியார்துறை,பொதுமக்களிடையே ஆலோசனை கலக்க லோகல் அஜெண்டா 21(Local Agenda 21) திட்டத்தில் மாநில அரசுகள் உறுதிகூறியுள்ளபடி, பினாங்கு அரசு நடந்துகொள்ளவில்லை என சுபாங், ஷா ஆலம் பயனீட்டாளர் சங்க(காசா)த் தலைவர் ஜேக்கப் ஜார்ஜ் கூறினார்.
பினாங்கில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பினாங்கு அரசின் அடைவுநிலை பற்றி மதிப்பீடு செய்வதாக இருந்தால் 10க்கு 4 புள்ளிகள்தான் கொடுப்பேன்”, என்றார்.
பினாங்கில் அங்காடி வியாபாரிகள்,பஸ் பயணிகள், பொதுமக்கள் ஆகியோரிடம் கேள்வித்தாள்கள் வழியாகவும் நேர்காணல்கள் வழியாகவும் மூன்று-நாள் ஆய்வு செய்ததன் அடிப்படையில் அவர் இம்முடிவுக்கு வந்துள்ளார்.
பினாங்கில் மேம்பாட்டுப் பணிகளின் குறைபாடுகள் பற்றிச் சுட்டிக்காட்ட முனைந்தால் அதற்குக் காரணம் முந்தைய அரசா நடப்பு அரசா என்று திருப்பிக் கேட்பதே வழக்கமாகி விட்டது என்று ஜார்ஜ் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
தவறுகளுக்கு முந்தைய அரசையே குறை சொல்லிக் கொண்டிருக்கக்கூடாது.அப்படியே தவறு நிகழ்திருந்தாலும் அதைச் சரிசெய்யும் பொறுப்பு நடப்பு அரசுக்கு உண்டு என்றாரவர்.
பினாங்கு ஒரு காங்கிரிட் காடு
“நடுத்தர வகுப்பினரும் ஏழைகளும் அவர்கள் குடியிருக்கும் இடங்களிலிருந்து வெளியேற்றப்படுவதைப் பார்க்கையில் வருத்தமாக உள்ளது.பொருளாதார நலனுக்காக பொதுமக்களின் நலன் பலியிடப்படுகிறதா என்பதை அறிய விரும்புகிறோம்.”
பினாங்கு என்ன பணக்காரர்களும் வெளிநாட்டவரும் மட்டுமே வாழ்வதற்கு ஏற்ற இடமா என்று கேள்வி எழுப்பிய ஜார்ஜ், கட்டிடங்களின் அடர்த்தியால் அம்மாநிலம் ஒரு “காங்கிரிட் காடு” போல் மாறிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
“அடர்த்தியை அதிகரிப்பதால் சொத்துவிலை குறையும் என்பது அறியாத்தனம், மடத்தனம். அப்படி நடந்திருப்பதைக் காண்பியுங்கள், பார்க்கலாம்.அப்போது தெரியும் அது உண்மையில் நடந்துள்ளதா, மேம்பாட்டாளரின் தில்லுமுல்லா என்பது.”
ஜார்ஜ் மேற்கொண்ட ஆய்வில் பினாங்கில் வீட்டு விலை பற்றித் தெரியவந்த விவரம்: ஒரு அடுக்குமாடி வீட்டின் விலை சுமார் ரிம300,000; கொண்டோமினியம், ரிம600,000-ரிம800,000; நிலத்துடன் கூடிய வீடு சுமார் ரிம1.5மில்லியன்.பல்-நோக்கம்கொண்ட உயர்மதிப்புள்ள சொத்துக்களாக இருந்தால் ரிம3மில்லியன் -ரிம4மில்லியன்.
இப்போக்கு தொடருமானால், சாமானியர்கள் அத்தீவில் வீடு வாங்குவது இயலாத காரியமாகிவிடும், அவர்கள் தலைநிலத்துக்குத்தான் செல்ல வேண்டும்.
“நாங்கள் சந்தித்த அத்தனை பேரும் எதிர்காலம் இருண்டு போயிருப்பதாகவும் விரைவில் அத்தீவிலிருந்து ‘மறைந்து போவோம்’ என்ற எண்ணம் உள்ளவர்களாகவும் இருந்தனர்.
“அரசு முதலீட்டாளர்களுக்கு மட்டும்தான் செவி சாய்க்குமா? முதலீடு, பினாங்கு மக்களின் வாழ்க்கைத்தரத்தை மதிப்பிடும் அளவுமானி அல்ல. பினாங்கு விரைவில் ஹவாயி போல் அல்லது கிறிஸ்மஸ் தீவுபோல் மாறப்போகிறது”, என்றவர் குத்தலாகக் குறிப்பிட்டார்.
அரசு மக்கள் கூறுவதைக் கேட்க வேண்டும்
பினாங்கு அரசு மக்களுடன் அலோசனை கலப்பதில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம். இட்ரிசை முதலமைச்சர் லிம் குவான் எங் “அவமதித்து விட்டார்” என்றும் ஜார்ஜ் குறைப்பட்டுக் கொண்டார்.
மாநில அரசு மக்கள் சொல்வதையும் கேட்க வேண்டும். ஆலோசனைக்கலத்தல் என்பது செய்தியாளர் கூட்டம் நடத்துவது, குறிப்பிட்ட சில என்ஜிஓ-க்களுக்கு விளக்கமளிப்பது மட்டும் அல்ல.
அதிகாரிகள் களத்தில் இறங்கி அடிநிலை மக்களைச் சந்திக்க வேண்டும்.சிஎம்’மின் தொலைநோக்கு பினாங்கு மக்களின் தேவைகளை நிறைவு செய்வதாக இருத்தல் வேண்டும்.
பினாங்கு எப்போதுமே மக்களின் நலன்களுக்காக போராடும் ஓர் இடமாக இருந்து வந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.அது,பல என்ஜிஓ-கள் தோன்றிய இடம் என்று கூறிய ஜார்ஜ், அங்கு ஒரு கும்பல் “என்ஜிஓ இயக்கத்தை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதுபோல்” தெரிகிறது என்றார்.
“பினாங்கு மக்களிடையே அச்ச உணர்வு தோன்றியுள்ளது.சிலர், சிலாங்கூரில் உள்ள எங்களிடம் முறையிட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.”
சிலாங்கூரில் ஒரு என்ஜிஓ-வுக்குத் தலைவராக உள்ள ஜார்ஜுக்கு பினாங்கில் என்ன அக்கறை என்று வினவியதற்கு தம் பணி ஒரு மாநிலத்துக்கு மட்டும் உரியதல்ல என்று மறுமொழி கூறினார்.
தாம் இப்படியெல்லாம் பேசுவதை வைத்து தம்மை அம்னோவின் கையாள் என்று சிலர் கூறக்கூடும் என்று குறிப்பிட்ட ஜார்ஜ், மனம்போன போக்கில் பேசவில்லை என்றும் உண்மைகளின் அடிப்படையில்தான் பேசுவதாகவும் கூறினார்.