பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸின் புதல்வர், அவரது மெய்க்க்காவலர் ஆகியோருக்கும் பாதுகாவலர் மேற்பார்வையாளர் ஒருவருக்கும் இடையில் இந்த வாரத் தொடக்கத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் கைகலப்பு குறித்து போலீசார் பாகுபாடு காட்டாமல் சுயேச்சையான விசாரணையை நடத்த வேண்டும் என பிகேஆர் கேட்டுக் கொண்டுள்ளது.
அந்தக் கட்சியின் உதவித் தலைவர் என் சுரேந்திரன், அதன் இளைஞர் தலைவர் சம்சுல் இஸ்காண்டார் முகமட் அக்கின் ஆகியோரும் அரசு சாரா அமைப்பான ஜிங்கா 13ம் கூட்டாக அந்த வேண்டுகோளை விடுத்துள்ளன.
அமைச்சருடைய நெருக்குதலுக்குப் போலீஸ் அடி பணியக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
போலீசார் தொழில் ரீதியாக செயல்பட வேண்டும் என்றும் மூத்த அமைச்சருடைய புதல்வர் ஒருவர் சம்பந்தப்பட்டிருந்தாலும் போலீசார் நியாயமாக புலனாய்வு செய்ய வேண்டும் என்றும் சுரேந்திரன் குறிப்பிட்டார்.
“போலீசார் மீதான மக்கள் நம்பிக்கை என்றும் இல்லாத அளவுக்குத் தாழ்ந்து விட்டது. தாங்கள் பாகுபாடு காட்டாமல் விசாரணை நடத்த முடியும் என்பதை அவர்கள் நிரூபிக்க வேண்டும்.”
“தமது புதல்வர் எப்படி Porsche ரகக் காரையும் மெய்க்காவலர்களையும் பெற்றிருக்க முடிகிறது என்பதையும் நஸ்ரி விளக்க வேண்டும். எல்லா அமைச்சர்களும் தங்களது சொத்துக்களை அறிவிக்க வேண்டிய தருணம் வந்து விட்டது,” என சுரேந்திரன் மேலும் சொன்னார்.
அந்தச் சம்பவத்தை பிரிக்பீல்ட்ஸ் ஒசிபிடி வான் அப்துல் பேரி வான் அப்துல் காலித் உறுதி செய்துள்ளதாகவும் சம்சுல் விடுத்த அறிக்கை கூறியது. அந்த விவகாரம் குற்றவியல் சட்டத்தின் 160வது பிரிவின் கீழ் தகராறு என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
சட்டத் துறைக்கான பொறுப்பு வழங்கப்பட்டுள்ள அமைச்சர் ஒருவருடைய புதல்வர் சம்பந்தப்பட்டுள்ளதால் அந்தக் குற்றச்சாட்டுக்கள் மீது முழுமையான சுயேச்சையான நியாயமான விசாரணை தேவை என அந்த பிகேஆர் இளைஞர் தலைவர் கோரினார்.
அந்த செவ்வாய்க்கிழமை சம்பவம் மீது உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஜிங்கா 13 விடுத்த அறிக்கை கேட்டுக் கொண்டது.
“மற்ற மக்களுடைய மனித உரிமைகளை சமூகம் மதிப்பது குறைந்து வருவதை அந்தச் சம்பவம் காட்டுவதாக ஜிங்கா 13 கருதுகிறது. பிரதமர் துறையில் சட்டத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் ஒருவருடைய புதல்வரான முகமட் நெடிம் சம்பந்தப்பட்டுள்ளதால் அந்த நிலை மேலும் மோசமடைந்துள்ளது.”
“அந்தச் சம்பவம் கேமிராவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அந்த விவகாரத்தைப் போலீசார் பாகுபாடற்ற முறையில் விசாரிக்க முடியும். அந்த ஒளிப்பதிவு முழு நேர்மையுடன் கையாளப்பட வேண்டும்,” என ஜிங்கா 13 மேலும் கூறியது.
பாதுகாப்பு நிறுவனங்கள் தங்களது நடவடிக்கை அனுமதிகளைப் புதுப்பித்துக் கொள்வதற்கு கூட்டரசு அரசாங்கத்தின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்பதால் அந்த விவகாரத்தை மூடுமாறு சில தரப்புக்கள் நெருக்கப்படுவதாகக் கூறப்படுவது பற்றியும் போலீஸ் விசாரிக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கேட்டுக் கொண்டது.
செவ்வாய்க் கிழமையன்று நிகழ்ந்த அந்தச் சம்பவம் மீது மலேசியாகினி நேற்று விரிவான செய்தியை வெளியிட்டது. முகமட் நெடிமும் அவரது மெய்க்காவலரும் தம்மைத் தாக்கியதாக பாதுகாவலர் குற்றம் சாட்டியதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.