நல்லா அன்வாரிடம் சொல்கிறார்: நீதிமன்றத்தில் சந்திப்போம்

அன்வாருக்கு எதிராக தாம் கூறிய கருத்துக்களை மீட்டுக் கொண்டு மன்னிப்புக் கேட்க வேண்டும் என அந்த எதிர்த்தரப்புத் தலைவர் கோரியிருப்பதை தான் புறக்கணிக்கப் போவதாக அன்வாருடைய அணுக்கமான முன்னாள் நண்பரான செனட்டர் எஸ் நல்லகருப்பன் கூறுகிறார்.

அன்வாரை தாம் நீதி மன்றத்தில் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் மலேசிய இந்தியர் ஐக்கிய முற்போக்குக் கட்சியின் தலைவருமான அவர் சொன்னார்.

“நான் அந்த நோட்டீஸ் பற்றிக் கவலைப்படப் போவதில்லை. நான் தொடர்ந்து அன்வாருக்கு எதிராகப் பேசுவேன். அன்வார் அந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றால் அது எனக்கு கௌரவமாக இருக்கும். அவர் அடுத்த வாரம் கூட வழக்கைச் சமர்பிக்கலாம்.”

“நான் அவரைச் சந்திக்கத் தயராக இருக்கிறேன். நான் பின்னர் மேலும் விவரங்களை வெளியிடுவேன்,” என அவர் இன்று கோலாலம்பூரில் பெர்க்காசா தலைமையகத்தில் நிருபர்களிடம் கூறினார்.

அந்த நிருபர்கள் சந்திப்பின் போது பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலியின் சகோதரி உம்மி ஹாபில்டாவும் முன்னாள் பிகேஆர் இளைஞர் தலைவர் எஸாம் முகமட் நோரும் இருந்தார்கள்.

தாம் இருபால் உறவுகளில் நாட்டமுள்ளவர் என்றும் எதிர்த்தரப்பை வழி நடத்துவதற்குத் தகுதியற்றவர் என்றும் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டதற்காக அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா மீது நல்லகருப்பன் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக செவ்வாய்க்கிழமை அன்வார் கூறியிருந்தார்.

நல்லகருப்பன் கூறியதாகச் சொல்லப்படும் குற்றச்ச்சாட்டுக்கள் முற்றிலும் பொய்யானவை என்றும் அரசியல் நோக்கம் கொண்டது என்றும்  கீழ்த்தரமான இதழியல் என்றும் பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் வருணித்திருந்தார்.

“கொள்கைகள், பொருளாதாரம் மீது பொது விவாதம் நடத்த  வருமாறு அன்வார் விடுத்த சவாலுக்கு ஒப்புக் கொள்வதற்குப் பதில் நஜிப், உத்துசான் மலேசியா வழியாக ஒருவருடைய நடத்தைக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கம் கொண்ட தரக்குறைவான வழியை நாடியுள்ளார்,” என அவர் விடுத்த அறிக்கை கூறியது.