மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் இராணுவ புரட்சி வெடித்தது

மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் நேற்று முன்தினம் இராணுவ புரட்சி வெடித்ததால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

மாலியில் குடியரசுத் தலைவர் அமடேவ் தொமானி தோரேவை எதிர்த்து அந்நாட்டு வடக்கு பகுதியில் பல ஆண்டுகளாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த பகுதியில் துவாரெக்லட் இன மக்கள் வசித்து வருகின்றனர். தாங்கள் சமூக, பொருளாதார ரீதியாக நசுக்கப்படுவதாக குற்றம்சாட்டிய அவர்கள், ஆட்சி மாற்றம் வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், நாள்தோறும் இராணுவத்துக்கும் கலவரக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், கலவரக்காரர்களை ஒடுக்க போதிய ஆயுதங்கள் இல்லை, இராணுவ வீரர்களை பற்றி குடியரசுத் தலைவர் கவலைப்படவில்லை என்று இராணுவத்தின் ஒரு பிரிவினர் கடும் கோபத்தில் இருந்தனர்.

அவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென குடியரசுத் தலைவர் மாளிகையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. அங்கு இராணுவ புரட்சி ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகை, தொலைக்காட்சி நிலையம் ஆகியவை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்து விட்டதாக கூறப்படுகிறது. எனினும் இதை அரசு மறுத்துள்ளது. அதிபர் அமடேவ் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.