அன்வார்: நஜிப் ரோஸ்மாவையும் மகாதீரையும் பார்த்துப் பயப்படுகிறார்

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் தமது சொந்த மாநிலமான பினாங்கில் பல செராமாக்களில் கலந்து கொண்டார்.

அங்கு ஆற்றிய உரைகளில் அவர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பற்றியும் அவரது மனைவி ரோஸ்மா மான்சோர் பற்றியும் பல நகைச்சுவைகளைக் கூறினார்.

தமது பரம எதிரியான நஜிப்-பை கோழை என வருணித்த அன்வார், பிரதமர் தமது மனைவியைப் பார்த்துப் பயப்படுவதாக சொன்னார்.

குடும்பத் தலைவர் ஒருவர் தமது மனைவியைக் காட்டிலும் துணிச்சல் உள்ளவராக இருக்க வேண்டும் எனக் கூறிய அன்வார் அதே போன்று கிராமத் தலைவரும் கிராம மக்களைக் காட்டிலும் தைரியமானவராக இருக்க வேண்டும் எனச் சொன்னார்.

“ஆனால் நாட்டின் தலைவர் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட், அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமா, தமது சொந்த மனைவி ஆகியோரைக் கண்டு கூட அஞ்சுகிறார்,” என அன்வார் மாச்சாங் பூபோக் பிகேஆர் நிகழ்வில் சொன்ன போது அங்கிருந்த 300 பேரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

மனைவியைக் கண்டு அஞ்சக்கூடாது. நேசிக்கப்பட வேண்டும். காரணம் மனைவி என்பவள் அவருடைய வாழ்க்கைத் துணைவி.”

அன்வார் தொடர்ந்து தமக்குத் திருமணம் நிகழ்ந்த 32 ஆண்டுகளுக்குப் பின்னர் தமது துணைவியும் பிகேஆர் தலைவருமான டாக்டர் வான் அஜிஸ வான் இஸ்மாயிலைத்  தாம் உலகப் புகழ் பெற்ற காதல் சின்னமான ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலைக் காண்பதற்கு அழைத்துச் சென்றதை விவரித்தார்.

“32 ஆண்டுகள் தாமதமாகச் சென்றாலும் எனது அண்மைய பயணத்தின் போது இந்தியாவில் உள்ள அந்த இடத்துக்குச் செல்ல வேண்டும் என்று நாங்கள் எடுத்திருந்த உறுதிமொழியை நிறைவேற்றினோம்.”

“ஆனால் அம்னோ மக்களுக்குத் தான் அளித்த வாக்குறுதிகளை 50 ஆண்டுகளாகியும் இன்னும் நிறைவேற்றவில்லை,” என்றார் அன்வார்.

பதில் இல்லை

தம்முடன் விவாதம் நடத்த நஜிப் தயங்குவதாகவும் அந்த பெர்மாத்தாங் எம்பி கூறினார்.

வில்கிலீக்ஸ் இணையத் தளத்தைத் தோற்றுவித்த ஜுலியான் அஸாஞ்ச் ஏற்பாடு செய்யும் விவாதம் ஒன்றில் தம்முடன் கலந்து கொள்ள பிரிட்டனுக்கு வருமாறு அண்மையில் அன்வார், நஜிப்புக்கும் பிரபலமான வலைப்பதிவாளர் ராஜா பெத்ரா கமாருதினுக்கும் அழைப்பு விடுத்தார்.

ஆனால் அன்வார் அழைப்புக்கு நஜிப் இது வரை பதில் அளிக்கவில்லை.

எதிர்த்தரப்புத் தலைவர், பல செராமாக்களில் முக்கியப் பேச்சாளராகக் கலந்து கொள்ளவும் ஆதரவாளர்களைச் சந்திக்கவும் கெடா, பினாங்கு மாநிலங்களுக்கு இரண்டு நாள் வருகை மேற்கொண்டுள்ளார்.

அன்வார் இன்றைய நிகழ்வின் போது தமது இயல்பான வேகமான ஆனால் நகைச்சுவை கலந்த உரைகள் மூலம் மக்களைக் கவர்ந்தார்.

ஒரு கட்டத்தில் அவர் மேடையை விட்டு இறங்கி கூட்டத்தினருடன் ஒன்றாகக் கலந்து உரையாற்றினார்.

அவர் பல நகைச்சுவைகளை குறிப்பாக கூட்டரசு அமைச்சரும் அம்னோ மகளிர் தலைவியுமான ஷாரிஸாட் அப்துல் ஜலிலை குறியாகக் கொண்ட “மாடு நகைச்சுவைகளை” கூறிய போது அங்கிருந்த பல இனங்களையும் சார்ந்த மக்கள் புன்னகை செய்தனர்.

முன்னாள் லெம்பா பந்தாய் எம்பி-யுமான ஷாரிஸாட்டின் குடும்பம் 250 மில்லியன் ரிங்கிட் தேசிய விலங்குக் கூட நிறுவன சர்ச்சையில் சம்பந்தப்பட்டுள்ளது. ஷாரிஸாட் அடுத்த மாதம் தமது அமைச்சர் பதவியைக் கைவிடுகிறார்.

அந்த நிகழ்வின் போது அன்வார் 100 இளைஞர்கள் சம்பந்தப்பட்ட அந்தத் தொகுதிக்கான தேர்தல் எந்திரத்தையும் தொடக்கி வைத்தார்.

அத்துடன் தாமான் அலாம் ஜெயாவைச் சேர்ந்த 34 தொண்டூழியர்களுக்கும் நியமனக் கடிதங்களை வழங்கினார்.

மனச்சாட்சியும் அரசியலும்

பெரும்பாலும் ஜுன் மாதம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் தேர்தலில் “நேர்மையான, தூய்மையான, நல்ல பண்புகளைக் கொண்ட மனச்சாட்சிக்கு அஞ்சும்” எம்பி-க்களையும் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களையும் பக்காத்தான் நிறுத்துவதைக் காணலாம் என்றும் அன்வார் சொன்னார்.

எடுத்துக்காட்டுக்கு கிளந்தான் மந்திரி புசாரும் பாஸ் ஆன்மீகத் தலைவருமான நிக் அஜிஸ் நிக் மாட்-டைக் குறிப்பிட்ட அவர்,  கடந்த 20 ஆண்டுகளாக நிக அஜிஸ் பதவியில் இருந்து வருகிறார். அவர் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை என்றார்.

“அவர் நிலம் வாங்குவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா ? அவருடைய பிள்ளைகளுக்கு சொந்தமாக நிறுவனங்கள் இருப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா ? அவர் எந்த ஊழலிலாவது சம்பந்தப்பட்டுள்ளதாக   நீங்கள் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா ?” என அவர் வினவிய போது கூட்டத்தினர் இல்லை எனப் பதில் அளித்தார்கள்.

“நிக் அஜிஸ் (செல்வத்தைச் சேர்க்காததால்) முட்டாள் என பிஎன் அல்லது அம்னோ மந்திரி புசார் சொல்வார்,” என அவர் குறிப்பிட்ட போது பெரும்பாலும் முதிய குடி மக்களாக இருந்த கூட்டத்தினர் புன்னகை செய்தனர். வெயில் கொளுத்திய போதிலும் அதனைப் பொருட்படுத்தாமல் அவர்கள் கூடாரத்தின் கீழ் அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.