சீனமொழி தெரியா ஆசிரியர்களை சீனப்பள்ளிகளுக்கு அனுப்பாதீர்!

சீனமொழியை கற்காத ஆசிரியர்களை தங்களுடைய சீனப்பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று அரசாங்கத்திடம் இன்று கேட்டுக்கொள்ளப்பட்டது. பலத்த எதிர்பார்ப்பும் பரபரப்பும் கொண்ட சுமார் 10,000 மக்கள் நிரம்பிய டோங் ஜோங் (DONG ZONG)) காஜாங் கல்லூரி வாளாகத்தில் உரையாற்றிய சீன அமைப்புகளின் முக்கிய தலைவர்கள் இந்த வேண்டுகோளை விடுத்தனர். (மேலும் படங்கள்)

இன்று காலை எட்டு மணி முதல் கூடத்தொடங்கிய இந்த மறியல் கூட்டம் சுமார் 11 மணி அளவில் டோங் ஜோங்கின் தலைவர் டாக்டர் யாப் சின் தியன் (Dr. Yap Sin Tian) உரையுடன் தொடங்கியது.

ஆரம்ப சீனப்பள்ளிகளில் தற்போது சீன மொழி பயிலாத ஆசிரியர்களின் பற்றாக்குறை 2,100-ஐ எட்டிவுள்ளதாகவும், சீன மொழி பயிலாத ஆசிரியர்களை கொண்டு கற்றல் கற்பித்தலை சீனப்பள்ளிகளில் திறண்பட செய்ய இயலாது என்றும், சீனப்பள்ளிகளில் தரமான கல்வி நிலையை உருவாக்க வேண்டுமானால் அதில் பயிலும் மாணவர்களின் தாய்மொழியியை ஆசிரியர்கள் பெற்றிருப்பது அவசியமாகிறது என்ற அவர், இந்ந நிலைமை இன்று நேற்றல்ல கடந்த 30 ஆண்டுகளாகவே தொடர்ந்து வருவதாகவும் அது தற்போது உச்ச கட்டத்தை அடைந்துள்ளதாகவும் டாக்டர் யாப் தெரிவித்தார்.

டாக்டர் யாப்பின் உரையைத் தொடர்ந்து, சீனப்பள்ளிகளின் ஆசிரியர் சங்கத் தலைவர், பள்ளி வாரிய அமைப்புகளின் தலைவர் மற்றும் தமிழ் அறவாரியத் தலைவர் பசுபதி சிதம்பரம் ஆகியோரின் உரைகள் இடம்பெற்றன.

தமிழ் அறவாரியத் தலைவர் பசுபதி தமதுரையில், தமிழ்-சீனப்பள்ளிகள் நாட்டின் நீரோட்டத்தில் இணைக்கப்படவேண்டும் என்றும் அவை தொடர்ந்து இரண்டாம் நிலையில் நடத்தப்படுவது மாற்றம் கண்டுவரும் உலக இயல்புகளுக்கு ஏற்புடையது அல்ல என்றார். தரமான கல்வியை தமிழ்ப்பள்ளிகள் வழங்க வேண்டுமானால், சீனப்பள்ளிகள் கேட்பதைப்போல் தமிழ்மொழியில் தகுதி உள்ளவர்களை மட்டுமே தமிழப்பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என்ற நிலை உருவாக வேண்டும் என்ற அவர், “அப்போதுதான் மொழி ஆற்றலும், அதன் தேவையும் அதிரிக்கும்” என்றார்.

இந்நிகழ்வில் பாதுகாப்போடு வருகை தந்த துணைக்கல்வி அமைச்சர் வீ கா யோங் (Wee Ka Siong) அரங்கத்தில் நுழைந்த போது மக்கள் எழுந்து நின்று ‘Sia Tai’ (பதவி விலகு!) என தொடர்ச்சியாக முழங்கினர். அதனைத் தொடர்ந்து பேரணியில் பங்கேற்பாளர்கள் அவரை ஏளனம் செய்தார்கள். காலை 11 மணி வாக்கில் அங்கு சென்றடைந்த வீ-யை நடுத்தர வயதுடைய ஒருவர் அணுக முயன்ற போது அவருக்கும் வீ-யின் மெய்க்காவலருக்கும் இடையில் சலசலப்பு மூண்டது. மலேசிய சீனர்கள் குறிப்பாக MCA வழியால் மத்திய அரசு தாய் மொழிக் கல்வி பிரச்சனைக்கு அரசியல் வழி தீர்வு காணப்படாத ஆதங்கத்தை அது வெளியிட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ் அறவாரியத்தின் ஆலோசகரும், சுவராம் தலைவருமான கா. ஆறுமுகம் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது, “தாய் மொழிக் கல்வியை குறிப்பாக தமிழப்பள்ளிகளையும் சீனப்பள்ளிகளையும் தேசியப் பள்ளிகளைப் போல சம நிலையில் வைக்க வேண்டும். மேலும், சீனர்கள் கோருவது போல், தமிழ்ப்பள்ளியின் நிலையை வலுவாக்க  தமிழ்மொழியில் குறைந்தது SPM அளவிலாவது சிறப்பு தேர்ச்சி (credit) பெற்றிருப்பதை ஆசிரியர் பணிக்கு கட்டாயமாக்க வேண்டும்” என்றார்.

“தமிழ்ப்பள்ளியிலே பயின்ற, தமிழ்ப்பள்ளிக்கு கூட ஆசிரியராக வர முடியவில்லை என்றால், யாரைக் குறை சொல்வது?” என்றவர், தமிழ்மொழி பயிலாத தமிழ்ப்பள்ளியில் பணிபுரியும்ஆசிரியர்களை அரசாங்கம் மீட்டுக்கொண்டு, தமிழ்மொழி பயின்றவர்களை ஆசிரியர்களாக தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பவது தமிழ்மொழியின் முக்கியத்துவத்தை அதிகரிக்கும் என்கிறார் வழக்கறிஞருமான ஆறுமுகம்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குலசேகரன், மனோகரன் மாரிமுத்து, செனட்டர் இராமகிருஷ்ணன், நெகிரி சட்டமன்ற உறுப்பினர் குணா உட்பட பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.