கோலா சிலாங்கூரில் நேற்றிரவு நடைபெற்ற பக்காத்தான் ராக்யாட் செராமா ஒன்றில் ஏளனம் செய்துகொண்டிருந்த ஒருவரை பங்கேற்பாளர்கள் பிடித்து வைத்தனர்.
அவர் தாக்கப்படுவதை தடுப்பதற்கு கூட்டத்தைக் கட்டுப்படுத்த பாஸ் கட்சி அமைத்துள்ள அமால் பிரிவினர் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர்.
செராமா நிகழ்ந்த கோலா சிலாங்கூர் அரங்கத்துக்கு வெளியில் 20 இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். அவர்கள் பக்காத்தான் எதிர்ப்பு பதாதைகளை வைத்தனர். அதே வேளையில் செராமாவில் கலந்து கொண்டவர்களையும் வேலிக்கு அப்பாலிருந்து கேலியும் செய்தார்கள்.
அதனால் ஆத்திரமடைந்த பங்கேற்பாளர்கள் வேலியை நோக்கி நகர்ந்ததுடன் ஏளனம் செய்கின்றவர்களை பிடிக்குமாறும் சத்தம் போட்டனர்.
ஏளனம் செய்வதில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள், அரங்கத்துக்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்களை சேதப்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.
அந்த இளைஞர்களில் ஒருவரை பங்கேற்பாளர்கள் பிடித்து அரங்கத்துக்குள் கொண்டு வந்தனர். வெள்ளைக் கோடுகளைக் கொண்ட இளம் சிவப்பு நிற டி சட்டையை அணிந்திருந்த அவரை உடனடியாக கூட்டத்தினர் மொய்த்துக் கொண்டனர். அந்த இளைஞரைச் சுற்றிலும் மனித வேலியை அமைப்பதற்கு அமால் தொண்டர்கள் அரும்பாடுபட்டனர்.
“அவரைத் தாக்க வேண்டாம், அவரைத் தாக்க வேண்டாம், விட்டு விடுங்கள்,” என அமால் உறுப்பினர் ஒருவர் கூச்சலிட்டார்.
அந்த இளைஞரைச் சுற்றி வளைத்துக் கொண்ட அமால் தொண்டர்கள் அரங்கத்துக் வெளியில் காத்துக் கொண்டிருந்த சகாக்களிடம் அவரைக் கொண்டு போய்ச் சேர்த்தனர்.
அந்த இளைஞர்களை கூட்டத்தினர் பின் தொடருவதைத் தடுப்பதற்காக அரங்க வாயில்கள் மூடப்பட்டன.
அந்தக் குழப்பம் நீடித்த வேளையில் பக்காத்தான் மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட அந்தக் கூட்டம் தங்கு தடையின்றித் தொடர்ந்தது.
பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், அந்த கைகலப்பு அரசாங்க ஆதரவு சக்திகளின் இன்னொரு அச்சுறுத்தல் நடவடிக்கை என அவர் வருணித்தார்.
“வழக்கம் போல மீண்டும் இடையூறுகள். இது கூலிக்கு அமர்த்தப்பட்ட குண்டர்களின் வேலை.”
டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் ஆகியோர் உட்பட பல பக்காத்தான் தலைவர்களும் செராமாவில் பேசினார்கள்.