பக்காத்தான்: புத்ராஜெயாவைக் கைப்பற்றினால் ஏஜி,முன்னள் ஐஜிபி மீது விசாரணை

அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட் புத்ரா ஜெயாவைக் கைப்பற்றினால் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேய்ல், முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மூசா ஹசான் ஆகியோர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் என்று டிஏபி பெருந்தலைவர் லிம் கிட் சியாங் அறிவித்துள்ளார்.

முன்னாள் வணிகவியல் குற்றப்புலனாய்வுத் துறை(சிசிஐடி) தலைவர் ரம்லி யூசுப், சுமத்திய குற்றச்சாட்டின்மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மறுப்பதால் பக்காத்தான் அந்நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றாரவர். ரம்லி,தாமும் தம் ஆள்களும் குண்டர் கும்பல் தலைவன் ஒருவனைக் கைது செய்ததற்காக அப்துல் கனி தங்கள்மீது குற்றச்சாட்டுகளை இட்டுக்கட்டி தங்களைக் குற்றவாளியாக்க முயன்றார் என்று கூறியிருந்தார். 

முன் எப்போதுல் இல்லாத வகையில் முன்னாள் உயர்போலீஸ் அதிகாரி ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார், மற்ற நாடுகளில்கூட இப்படி நடந்ததில்லை என்கிறபோது பிரதமர் உடனடியாக விசாரணைக்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என்று லிம் குறிப்பிட்டார். நேற்றிரவு கோலா  சிலாங்கூர் விளையாட்டரங்கில் 5,000 பேரடங்கிய கூட்டத்தில் உரையாற்றியபோது லிம் இவ்வாறு கூறினார்.

கடந்த  வெள்ளிக்கிழமை நஜிப், தகுந்த ஆதாரங்கள் காண்பிக்கப்படவில்லை என்று கூறி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற வேண்டுகோளைத் தள்ளுபடி செய்தார்.

இதனால்,ரம்லி, தவறாகக் குற்றம்சாட்டப்பட்டு தவறான குற்றச்சாட்டுகள் என்பதால் நீதிமன்றங்களாலும் விடுவிக்கப்பட்ட தமக்கும் தம் அதிகாரிகளுக்கும் நீதி மறுக்கப்பட்டதாகக் கூறி வருத்தப்பட்டார்.

மலேசியாகினி, ரம்லி, 2007-இல் தம் மீதும் தம் ஆள்கள்மீதும் அப்துல் கனி அபாண்ட பழிகளைச் சுமத்தினார் என்றும் ஆனால் நீதிமன்றங்கள் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளித்துத் தங்களை விடுவித்ததாகவும் கூறினார் என அறிவித்திருந்தது.

அத்துடன் கனி, மலேசியா ஊழல்தடுப்பு ஆணையத்தைப் பயன்படுத்தித் தமக்கும் தம் ஆள்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க முயன்றதையும் அவர் விவரித்திருந்தார்.

அதன் விளைவாக ரம்லியும் அவரின் அதிகாரிகள் அறுவரும் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.ஆனால், அவர்கள் அனைவரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது.

இப்போது ரம்லி, இதனை அம்பலப்படுத்தியதை அடுத்து பல போலீஸ் அதிகாரிகள்-பணி ஓய்வுபெற்றவர்களும் பணியில் இருப்பவர்களும்- கனியையும் மூசாவையும் விசாரிக்க நடுவர் மன்றம் ஒன்று அமைக்கப்படுமானால் அதில் சாட்சியமளிக்க முன்வந்துள்ளனர்.