கூடுதல் தொகுதிகள் இல்லையேல் மும்முனை போட்டிதான் -டிஏபி எச்சரிக்கை

எதிர்வரும் பொதுத் தேர்தலில் டிஏபி-க்குக் கூடுதல் தொகுதிகள் வழங்கப்படவில்லையென்றால் அக்கட்சி வேறு வழியில்லாமல் மும்முனை போட்டியை உருவாக்கக்கூடும்.

கெடாவில் டிஏபி-இன் ஒரே சட்டமன்ற உறுப்பினராகவுள்ள லீ குவான் ஏய்க் இவ்வாறு கூறியுள்ளார்.

டிஏபி, கெடா அரசில் கூடுதல் பங்காற்ற விரும்புகிறது, அதற்கு மாநில அரசில் கூடுதல் பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்று கோத்தா டாருல் அமான் சட்டமன்ற உறுப்பினரான லீ கூறினார்.

“கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்று நாங்கள் அடித்துக் கேட்கவில்லை.முடிவைத் தேசிய தலைமையிடம் விட்டு விடுகிறோம்.அதன் முடிவை ஏற்போம்.ஆனால், கெடாவில் பல இடங்களில் வலுவுடன் இருப்பதால் கூடுதல் இடங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்”, என்று மலேசியாகினியிடம் அவர் தெரிவித்தார்.

“பாஸ் கட்சியின் செல்வாக்கைக் குறைக்கும் நோக்கமெல்லாம் கிடையாது. பினாங்கில் முதலமைச்சர் லிம் குவான் எங்குக்கு உள்ள வலுவான ஆதரவின் தாக்கத்தால் இங்கு எங்களுக்குள்ள ஆதரவும் அதிகரித்து வருகிறது”.

நேற்று கெடா மந்திரி புசார் அசிசான் அப்துல் ரசாக், டிஏபிக்குக் கூடுதல் இடங்கள் வழங்கப்படாது என்று அறிவித்ததன் தொடர்பில் லீ இவ்வாறு கூறினார்.

பாஸ், பிகேஆர், டிஏபி ஆகியவற்றுக்கிடையில் தொகுதிப் பங்கீடு 2008-இல் இருந்ததுபோல்தான் இருக்கும் என்று அசிசான் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

பக்காத்தான் ரக்யாட்டில் பிரச்னைகளை உண்டுபண்ணும் முயற்சி

அசிசானின் கூற்றுக்கு மறுப்புத் தெரிவித்த லீ, “அரசியல் விளையாட்டு விளயாடுகிறாரா அல்லது பக்காத்தான் ரக்யாட்டில் பிரச்னைகளை உண்டுபண்ணப் பார்க்கிறாரா” என்பது  புரியவில்லை என்றார்.

மந்திரி புசார் இப்படிப் பேசுவது முதல்முறை அல்ல.பல தடவை இப்படிப் பேசியுள்ளார் என்றார் லீ. 

மாநில அளவில்தான், தொகுதிப் பங்கீடு தொடர்பில் சர்ச்சைகள் உண்டே தவிர பக்காத்தான் தலைவர்களுக்கிடையில் இப்படிப்பட்ட சர்ச்சைகள் உருவாவதில்லை என்று லீ குறிப்பிட்டார்.

டிஏபி-க்கு ஒரே ஒரு தொகுதி ஒதுக்கப்படுவது “அநியாயம்” என்று கூறிய லீ, அக்கட்சிக்கு பல இடங்களில் ஆதரவாளர்கள் இருப்பதாகச் சொன்னார்.

பக்கார் ஆராங், குருன், சுங்கை பட்டாணி ஆகிய இடங்களில் டிஏபி நீண்ட காலமாக செல்வாக்கு பெற்று விளங்குகிறது.அண்மையில் அங்கு மலாய்க்காரர் ஆதரவும் பெருகியுள்ளது என்றாரவர்.

எதிர்வரும் தேர்தலில் டிஏபி ஆறு சட்டமன்ற இடங்களையும் இரண்டு நாடாளுமன்ற இடங்களையும் எதிர்பார்க்கிறது என்றார் லீ.

ஆனால்.மாநிலத் தொகுதிப் பங்கீடு தொடர்பில் மத்திய தலைமை இன்னும் கூட்டம் நடத்தவே இல்லை.அதனால் அது என்ன முடிவு செய்யும் என்பது உறுதியாக தெரியவில்லை.

இப்போது கெடா சட்டமன்றத்தின் 36 இடங்களில் பக்காத்தானுக்கு 20, பிஎன்னுக்கு14, இரண்டு இடங்கள்- லூனாசும் பத்து ஆராங்கும்-சுயேச்சைகளிடம் உள்ளன.

2008 தேர்தலில், பாஸ் 24 இடங்களில் போட்டியிட்டு 16-இல் வென்றது. பிகேஆர் 11 இடங்களில் போட்டியிட்டு நான்கில் வென்றது.வென்ற நால்வரில் இருவர் சுயேச்சைகளாக மாறினர். டிஏபி ஒரு தொகுதியில் மட்டும் வென்றது.எஞ்சிய 14 இடங்களையும் பிஎன் வென்றது.

TAGS: