பக்காத்தான் ரக்யாட்டில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுகள் வெற்றி பெறவில்லை என்றால் மட்டுமே கெடா டிஏபி மும்முனைப் போட்டியில் இறங்கும்.
இவ்வாறு, நேற்று தாம் விடுத்த அறிக்கை குறித்து விளக்கமளித்துள்ளார் டிஏபி டாருல் அமான் சட்டமன்ற உறுப்பினர் லீ குவான் ஏய்க்.ஆனால், நிலைமை அந்த அளவுக்குச் சென்றுவிடவில்லை என்று குறிப்பிட்ட அவர் பக்காத்தான் மத்திய தலைமையின் உதவியுடன் கெடா சர்ச்சைக்குத் தீர்வு கண்டு விட முடியும் என்றும் நம்புகிறார்.
“பிரச்னை என்னவென்றால் உயர்த்தலைவர்கள் இன்னும் அவ்விவகாரம் பற்றி விவாதிக்கவில்லை.ஆனால், நல்ல தீர்வு காணப்படும் என்றே எதிர்பார்க்கிறேன்”.
நேற்று வெளியிடப்பட்ட தம் அறிக்கை குறித்து ஊடகங்கள் ‘கேள்விக்கணைகளா’ல் துளைத்தெடுத்து விட்டன என்றும் அதனாலேயே அதற்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் எழுந்ததாகவும் அவர் சொன்னார்.
டிஏபி-க்குக் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படவில்லை என்றால் அது மும்முனைப் போட்டியில் குதிக்கும் என்று மலேசியாகினி நேற்று லீயை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டிருந்தது.
கெடாவில் அரசியல் சூழல் மாறியுள்ளது என்றும் அதனால் டிஏபி ஆறு சட்டமன்ற இடங்களையும் இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளையும் எதிர்பார்க்கிறது என்றும் லீ கூறியிருந்தார்.
‘வழிகாட்டிகளைப் பின்பற்றுக’
இதனிடையே, கெடா மாநில பிகேஆர் தலைவர் வான் சாலே வான் இசா, 2004-இல் பிகேஆர் வென்ற இடங்களை டிஏபி கேட்பது முறையல்ல என்றார்.
தொகுதி ஒதுக்கீடு தொடர்பில் கெடா மந்திரி புசார் அசிசான் அப்துல் ரசாக் கூறியதை அவர் வரவேற்றார். பாஸ், பிகேஆர், டிஏபி ஆகியவற்றுக்கிடையில் தொகுதிப் பங்கீடு 2008-இல் இருந்ததுபோல்தான் இருக்கும் என்று அசிசான் அறிவித்திருந்தார்.
“12வது பொதுத்தேர்தலில் எந்தக் கட்சி எந்தத் தொகுதியில் வெற்றி பெற்றதோ அந்தத் தொகுதியை அது வைத்துக்கொள்ளும் என்பதுதான் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள வழிகாட்டி முறையாகும்”, என்று வான் சாலே கூறினார்.
இவ்விவகாரம் தொடர்பில் மத்திய தலைமை செய்யும் முடிவை டிஏபி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“மாநிலத் தலைவர்கள் மத்தியில் செய்யப்படும் முடிவுகளை மதிக்க வேண்டும்..மாநில விவகாரங்களாக இருந்தாலும் அவர்கள் மனம்போன போக்கில் செயல்பட முடியாது”, என்றாரவர்.